

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனின் புறநகர் பகுதியில் பூங்கா, சுரங்க நடைபாதைகளில் எழுதப்பட்டுள்ள ஹிந்து மத எதிர்ப்பு வாசகங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை எழுதியவர்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ.13 லட்சம் வரை சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கடந்த ஜூலை மாதம் முதல் இதுபோன்ற ஹிந்து மத எதிர்ப்பு வாசகங்களை சிலர் தொடர்ந்து பொது இடங்களில் எழுதி வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த எதிர்ப்பு வாசகங்கள் கறுப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளன. பூங்கா சுவர், பெஞ்சுகள், சுரங்க நடைபாதை உள்ளிட்ட இடங்களில், ஹிந்துக்களுக்கு இங்கு இடமில்லை, ஹிந்துக்களை இல்லாமல் செய்வோம் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில்தான் இவை எழுதப்படுகின்றன. இது தொடர்பாக வெர்ஜினியா மாகாண பிரதிநிதி டேவிட் கூறுகையில், ஹிந்துக்களும், கிறிஸ்தவர்களும் இங்கு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களின் எண்ணம் நிறைவேறாது. இந்தபிரச்சினையை விவாதிப்பதற்காக அரசு அதிகாரிகள், போலீஸார், மக்கள் பிரதிநிதிகள், அமெரிக்க இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் அமைத்துள்ள கூட்டமைப்புகள், ஹிந்து மத எதிர்ப்பு வாசகங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல் அளித்தால் ரூ.13 லட்சம் வரை சன்மானம் அளிக்கப்படும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.