Published : 15 Oct 2013 03:07 PM
Last Updated : 15 Oct 2013 03:07 PM

பூமியின் மீது ஐசான் வால் நட்சத்திரம் மோதுமா?

ஐசான் வால்நட்சத்திரத்தைக் காண்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 18ம் தேதி வரை வானில் உலா வர இருக்கிறது ஐசான் வால்நட்சத்திரம். இந்த வால்நட்சத்திரத்தைக் கண்டு களிக்க, பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் வால்நட்சத்திரங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

ஐசான் வால்நட்சத்திரம் பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த உதயன் 'தி இந்து' நிருபரிடம் கூறியதாவது:

"செப்டம்பர் 2012ல் சர்வதேச ஒளி ஊடகக் கூட்டமைப்பு (ஐசான்) தான் இந்த வால்நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தது. எனவே அதற்கு ஐசான் என்று பெயரிடப்பட்டது.

சூரிய மண்டலத்துக்கு அடுத்துள்ள 'ஊர்ட்' எனும் மேகப் பகுதியில் இருந்து வரும் ஒரு புதிய வால்நட்சத்திரம் இது. மேலும், பவுர்ணமி நிலவின் பிரகாசத்தை விட மிக அதிக பிரகாசமாக இந்த வால்நட்சத்திரம் இருக்கும் என்று நம்பப்படுவதால் இதற்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

கடந்த 200 ஆண்டுகளாக நாம் பார்த்த வால்நட்சத்திரங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் சூரியனையே சுற்றி வருபவை ஆகும். ஆனால் முதன்முறையாக சூரியனை நோக்கி வருகிறது இந்த ஐசான் வால்நட்சத்திரம். மேலும் 'ஊர்ட்' மேகப் பகுதியில் இருந்து வரும் இந்த வால்நட்சத்திரம் சூரிய குடும்பம் தோன்றியபோது உருவானது.

அதனால் அது சூரிய குடும்பம் தோன்றிய காலத்தில் உள்ள தகவல்களைப் பத்திரமாக வைத்திருக்கும். அதன் மூலம் உலகம் தோன்றியதைப் பற்றி மேலும் புதிய ஆய்வுகளை முன்னெடுக்க உதவும்.

இந்த வால்நட்சத்திரம் பூமியில் மோத வாய்ப்பு இல்லை. வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 18ம் தேதி வரை இந்த வால்நட்சத்திரம் வானில் புலப்படும்.

அப்போது தொலைநோக்கி, பைனாகுலர் போன்றவற்றின் மூலம் இதை நாம் காண முடியும். வெறும் கண்களாலும் இதை நாம் பார்க்கலாம்.

இந்த வால்நட்சத்திரம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதைக் கண்டு களிக்க உதவும் விதமாகவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகம் முழுக்க பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

சென்னையில், நவம்பர் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் கடற்கரையில் அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இந்த வால்நட்சத்திரத்தைப் பொதுமக்கள் கண்டு களிக்க அறிவியல் இயக்கத்தின் தொண்டர்கள் உதவுவார்கள்". இவ்வாறு உதயன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x