தெரியாத தேவதைகளும் தெரிந்த பிசாசும்

தெரியாத தேவதைகளும் தெரிந்த பிசாசும்
Updated on
2 min read

சிரியாவில் என்ன நடக்கிறது? தெற்கு சூடானில் என்ன நடக்கிறது? தாய்லந்தில், இராக்கில் எல்லாம் என்ன நடக்கிறது? காரணம் என்னவானாலும் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி நடக்கிற கிளர்ச்சிகளிலும் அடக்குமுறைகளிலும் இன்னபிற சர்வநாச களேபரங்களிலும் வித்தியாசம் ஏதுமில்லை.

உக்ரைனிலும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட அதிபர் பெருமான் மறுத்துக்கொண்டிருக்கிறார். இதன் பின்னணியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இருக்கிறார். உக்ரைனுக்கு ரஷ்யா முக்கியமா, ஐரோப்பிய தேசங்களுடனான நல்லுறவு முக்கியமா என்னும் வினாவை முன்வைத்து நடைபெறும் மக்கள் போராட்டத்தின் நேற்றைய பரிமாண வளர்ச்சி, பிரதமர் மிகோலா அசாரோவ் தமது பதவியை ராஜினாமா செய்தது.

பிரதமர் ராஜினாமா செய்தாரென்றால் அமைச்சரவையும் வீட்டுக்குப் போகும். நாடாளுமன்றம் முடங்கும். அதிபர்தான் ஆளவேண்டி வரும். ஆனால் அவரைத்தான் மக்கள் வீட்டுக்குப் போகச் சொல்லிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவரோ மாட்டவே மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, ஆட்சியாளர்களின் மனநிலை. தேசத்துக்கு இதுதான் நல்லது என்று இரண்டு தரப்பும் சொல்லிக் கொண்டிருந்தாலும், இப்போது நடக்கிற கந்தரகோலங்கள் உக்ரைனின் பொருளாதார வளர்ச்சிக்கு உடனடி முட்டுக்கட்டை போடவல்லது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய தேசம் உக்ரைன்.

ஆனால் 1996 வரைக்கும் உற்பத்திதான் இருந்ததே தவிர, ஏற்றுமதிதான் இருந்ததே தவிர பிராந்திய வளர்ச்சி என்ற ஒன்று இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகுதான் உக்ரைன் தன்னை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியது. ஒப்பீட்டளவில் உருப்படி யான அரசியல்வாதிகள் அங்கே நிறையப்பேர் இருந்தார்கள். ஊழலும் குறைவாக இருந்தது. எனவே ஊர் வளர்ந்தது. குறிப்பாக விவசாய மானியங்கள் வழங்குவதில் உக்ரைன் ஆட்சியாளர்கள் பல அற்புத சாதனைகளை நிகழ்த்திக்காட்டி உற்பத்தியை நம்பமுடியாத அளவுக்கு உயர்த்த வழி வகுத்தார்கள்.

ஒரு பக்கம் விவசாய உற்பத்திப் பொருள்கள் என்றால், மறுபக்கம் போக்குவரத்து வாகன உற்பத்தி. தரை முதல் வான் வரை, பயண சௌகரியங்களுக்கேற்ப வாகன உற்பத்தி செய்வதில் உக்ரைனை அடித்துக்கொள்ள இன்னொரு தேசமில்லை என்பார்கள்.

எல்லாம் இருந்தும் எதனால் அவர்கள் ரஷ்யாவை அண்டியிருக்க வேண்டியுள்ளது என்றால், முதல் மற்றும் முக்கியக் காரணம் எரிபொருள். வானம் பொழிந்து, பூமி விளைவதெல்லாம் சரி. எதுவும் பொழியாமல் தன்னால் ஊறக்கூடிய எண்ணெய் ஊற்று அங்கே அதிகமில்லை. தனது பெட்ரோலியத் தேவைகளுக்கு ரஷ்யாவைத்தான் உக்ரைன் பெரிதும் நம்புகிறது. எண்ணெய் என்பது ஒரு கண்ணி. ஒரு தூண்டில். மறுக்கவே முடியாத லாலிபாப்.

தவிரவும் புதின் பதவிக்கு வந்த பிறகு உக்ரைன் விஷயத்தில் அவர் தந்திருக்கக்கூடிய சலுகைகள் சிறிதல்ல. தெரியாத ஐரோப்பிய தேவதைகளைக் காட்டிலும் அவர் தெரிந்த ரஷ்யப் பிசாசு. இட, இன, இருப்பியல் ரீதியில் ரஷ்யாவுடனான நல்லுறவு உக்ரைனுக்கு முக்கியம் என்று அதிபர் விக்டர் யானுகோவிச் நினைக்கிறார்.

அது அவருக்கு மட்டும்தான் நல்லதே தவிர, உக்ரைனுக்கு நல்லதல்ல என்கிறது எதிர்க்கட்சிகள் மற்றும் எதிரிக் கட்சிகள். மக்களாதரவு இந்த எதிர்த்தரப்புக்கு அதிகம் இருப்பதுதான் இன்றைய பிரச்சினையின் மூல காரணம்.

இப்போதைக்கு யானுகோவிச் பதவி விலகுவார் என்று தோன்றவில்லை. எனவே பிரதமரின் ராஜினாமா பயனற்ற செயலாக சரித்திரத்தின் ஃபுட்நோட்களில் சிறு எழுத்துகளில் காணாமல் போகப் போவதுதான் நிகர நஷ்டம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in