

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் 46 பேர் பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தரப்பில், "எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவின் புறநகர் பகுதியில் மிகப் பெரிய குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு உயிரி வாயு ஆலை கட்டுமானத்துக்காக நிறைய குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சனிக்கிழமையன்று, அந்தக் கிடங்கில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் சரிந்து விழுந்தது. குப்பை குவியல்களுக்கு அருகாமையிலேயே அமைக்கப்பட்டிருந்த மர வீடுகள் சரிந்து விழுந்த குப்பையில் மூழ்கின. இதில், 46 பேர் பலியாகினர். இவர்களில், 32 பேர் பெண்கள், 14 பேர் ஆண்கள். குழந்தைகளும் அடங்குவர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பலர் இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுதல் பணிநடைபெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்திலிருந்து உயிர் தப்பிய மூசா சுலைமான் அப்துல்லா கூறும்போது, "நாங்கள் வெளியே வரும்போது சூறாவளி எங்களை நோக்கி வருவது போல இருந்தது. நான் எனது குடும்ப உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த மக்களின் உதவியுடன் தப்பித்து விட்டேன் " என்றார்.
அக்குப்பை கிடங்கில் பணிபுரியும் இப்ராஹிம் முகமது,"இந்த பெரும் விபத்து வெறும் 3 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது" என்றார்
உயிரி வாயு ஆலை கட்டுமானமே இந்த விபத்துக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.