

எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக இந்தியா ‘அராஜகப் போக்கை’ கடைபிடிப்பதற்கு இது நேரமல்ல என்று சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்தியாவுக்கான அமெரிக்காவின் ஆதரவு மேலோட்டமானது, அதனால் யாதொரு பயனுமில்லை என்றும் கூறியுள்ளது.
“எல்லை விவகாரத்தில் சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல. சீனாவின் தேசிய வலுவை ஒப்பிடும்போது இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது, மேலும் அமெரிக்காவுடனான பாதுகாப்பு கூட்டணியெல்லாம் மேம்போக்கானது, சீனாவுக்கு எதிராக அராஜகப் போக்கை கடைபிடிக்க இந்தியாவுக்கு இது நேரமல்ல, இந்தியாவுடன் மோதல் போக்கை சீனா விரும்பவில்லை” என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய எல்லைப் போக்குகள் கீழ்மட்ட ராணுவ வீரர்களின் செயல்பாடா, அல்லது இந்திய அரசின் ஏனோதானோவென்ற உத்தியா? என்ன காரணமாக இருந்தாலும், சீனா தனது அடிப்படைக் கொள்கையில் மாறாது. எப்படியாகினும் இந்தியப் படையினரை பின்வாங்கச் செய்வதே சீனாவின் வேலையாக இருக்கும். சீனாவின் சாலைக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப் படக் கூடாது.
“இந்தியாவுடன் நட்புறவையே சீனா விரும்புகிறது, ஆனால் இது பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இருக்க வேண்டும். சீனாவுக்கு எதிராக அராஜகப் போக்கை வெளிப்படுத்த இந்தியாவுக்கு இது நேரமல்ல” என்று மீண்டுமொருமுறை அந்தக் கட்டுரையில் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.