சீக்கியர் தொடுத்த வழக்கை ரத்து செய்ய சோனியா காந்தி மனு

சீக்கியர் தொடுத்த வழக்கை ரத்து செய்ய சோனியா காந்தி மனு
Updated on
1 min read

அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கு எதிராக சீக்கிய அமைப்பு தொடுத்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிப். 7ம் தேதி மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து 1984ல் சீக்கியர்களை இலக்கு வைத்து நடந்த கலவர விவகாரத்தில் புதிதாக வழக்கு தாக்கல் செய்யப்படுவதை தவிர்க்க வழி செய்யுமாறும் அவர் இந்த மனுவில் கோர இருக்கிறார். அமெரிக்க நீதிமன்றங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கறிஞராக ரவி பாத்ரா ஆஜராகி வருகிறார்.

‘சீக்கியர்களுக்கு நீதி’ என்ற அமைப்பினர் தனக்கு எதிராக கொடுத்துள்ள புதிய புகாரை ரத்து செய்ய உத்தரவிடுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாக்கல் செய்ய உள்ள மனுவுக்கு ஆதரவாக நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் 85 பக்க விளக்க அறிக்கையை ரவி பாத்ரா வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

விளக்க அறிக்கையில் பாத்ரா தெரிவித்துள்ளதாவது:

நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பிரியன் கோகண் முன்னிலையில் சீக்கியர்களுக்கு நீதி அமைப்பு தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிடுமாறு சோனியா காந்தி பிப்ரவரி 7ல் மனு செய்ய உள்ளார். கலவரத்தில் சோனியா காந்திக்கு தனிப்பட்ட பொறுப்பு ஏதும் இல்லை. சம்மனும் அவருக்கு வழங்கப்படவில்லை. கலவரம் தொடர்பாக நஷ்ட ஈடு கோருவதிலும் முறையான அணுகுமுறை இல்லை. இந்த குறைபாடுகளால் வழக்கை ரத்து செய்யும்படி சோனியா கோருவார் என்று பாத்ரா தெரிவித்துள்ளார்.

சோனியா கடிதம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரில் சோனியா காந்தி கையெழுத்திட்டு தன்னிடம் கொடுக்கப்பட்ட கடிதத்தை நீதிமன்றத்தில் பாத்ரா ஒப்படைத்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நியூயார்க்கில் நான் இருந்ததாகவும் இந்த வழக்கில் எனக்கு சம்மன் ஒப்படைக்கப்பட்டதாகவும் சீக்கியருக்கான நீதி அமைப்பு தெரிவித்துள்ளது உண்மைக்கு மாறான தகவல்.

கடந்த செப்டம்பரில் நான் நியூயார்க்கில் இல்லை என்று கடிதத்தில் சோனியா எழுதியிருக்கிறார். சோனியாவின் இந்த கடிதம் தொடர்பாக ஜனவரி 23க்குள் பதில் தெரிவிக்கும்படி சீக்கியருக்கான நீதி அமைப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2013ம் ஆண்டு செப்டம்பர் 2 க்கும் 9ம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஸ்லோவான் கெட்டரிங் நினைவு மருத்துவமனையில் சோனியா சிகிச்சை எடுத்தபோது மருத்துவமனையிலும் அதன் பாதுகாப்பு ஊழியர்களிடமும் சம்மன் வழங்கியதாக சீக்கியருக்கான நீதி அமைப்பு தெரிவித்திருந்தது.

விளம்பர யுக்தி

அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க அனுமதிக்கப்பட்டதை தம்மை பிரபலப்படுத்திக்கொள்ளும் வகையில் பயன்படுத்திக்கொள்கிறது சீக்கியர் அமைப்பு. வேறு எதையும் அது சாதிக்கவில்லை என்று வழக்கறிஞர் பாத்ரா வாதிட்டார். சீக்கியர்களுக்கு எதிராக 1984ல் நடந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களை சோனியா பாதுகாக்கிறார் என்று சீக்கியர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in