

தீவிரவாத படைகளின் பிடியில் இருக்கும் இராக்கில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய செவிலியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
இராக்கில் முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ராணுவ வீரர்கள் மீது ஐ.எஸ்.ஐ.எல். (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் இராக் அண்ட் தி லெவன்ட்) என்ற தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல், பல இடங்களில் ராணுவ வீரர்கள் பின்வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், திக்ரிக் நகரில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்திய செவிலியர்களுடன் தொடர்பு கொள்ள சர்வதேச செம்பிறை அமைப்புடன் இந்திய அரசு உதவி கோரியது. அந்த அமைப்பின் உதவியுடன், 46 செவிலியர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர இராக் அரசுடனும், ஈராக்குக்கான ஐ.நா குழுவினருடனும் தொடர்பில் இருப்பதாகவும். அங்குள்ள செவிலியர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அங்குள்ள இந்திய செவிலியர்களை உடனடியாக மீட்பதில் சிக்கல் நிலவுவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றே இந்தியர்கள் இராக்கில் இருந்து வெளியேறுமாறு அரசு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியா கண்டனம்:
இராக்கில் கடந்த 8-ம் தேதி முதல் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அங்குள்ள இந்தியர்களின் நிலைமை என்னவென்பது மிகவும் கவலை அளிப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இராக்கில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர ஹெல்ப்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இராக்கில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றது.