

பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே அதிக சொத்து மதிப்பு உடையவர் அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவருக்கு ரூ. 146 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சில லட்சங்கள் சொத்து மதிப்பு உடையவரும் உள்ளனர்; பல கோடிக்கு அதிபதிகளும் உள்ளனர். சில எம்.பி.க்கள் சர்க்கரை ஆலை, பின்னலாடைத் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றனர். பெரும் நிலக்கிழார்களாகவும் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். பிரதமர் நவாஸ் ஷெரீப், தேர்தல் ஆணையத்துக்கு காட்டிய கணக்கில் தனக்கு ரூ.143 கோடி மதிப்பில் வேளாண் நிலம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், 1.3 கோடி அளவுக்கு பல்வேறு ஆலைகளில் பங்குகளில் முதலீடு செய்துள்ளார். ரூ. 1.26 கோடி வங்கியிருப்பு உள்ளது.
ஒரு லேண்ட் குரூஸர் வகை கார், இரு பென்ஸ் கார்கள், ஒரு டிராக்டர் ஆகியவையும் அவரது பெயரில் உள்ளன. அவரது மனைவிக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான நகைகள் உள்ளன. பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் தலைவர் இம்ரான் கான் நடப்பு ஆண்டின் மிக ஏழையான எம்.பி. ஆவார். நடப்பு ஆண்டு அவரின் நிகர சொத்து மதிப்பு ரூ. 2.96 கோடி. கடந்த நிதி ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டு அவரின் சொத்து மதிப்பு ரூ. 5 லட்சம் அளவுக்குக் குறைந்துள்ளது.
இது தவிர ரூ. 50 லட்சம் மதிப்புள்ள டொயாட்டோ பிராடோ வகை கார், ரூ. 1.36 கோடி வங்கியிருப்பு ஆகியவை உள்ளன.
முதல்வர்களின் சொத்து மதிப்பு
கைபர்-பக்துன்க்வா மாகாண முதல்வர் பர்வேஸ் கட்டாக்கிற்கு ரூ.22.1 கோடி மதிப்பில் நிலங்களும், ரூ.13 லட்சம் மதிப்பில் காரும் உள்ளது. பஞ்சாப் மாகாண முதல்வர் சபாஷ் ஷெரீபுக்கு ரூ.14.22 கோடி சொத்து உள்ளது. அவரது மனைவிக்கு இதைவிட அதிக மதிப்பில் சொத்து உள்ளதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாண முதல்வர் அப்துல் மாலிக்குக்கு, ரூ.280 கோடி மதிப்பில் வேளாண் நிலம் உள்ளது. ஆனால், அவருக்குச் சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை. சிந்து மாகாண முதல்வர் காயிம் அலி ஷாவின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 162கோடி. அவரிடமும் வாகனம் எதுவும் இல்லை. தனது மகளின் ஹோண்டா சிட்டி காரைப் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.