

துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நடத்திய ராணுவ புரட்சியை பொதுமக்கள் வெற்றி கரமாக முறியடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் 265 பேர் உயிரி ழந்தனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவ புரட்சி யில் ஈடுபட்ட 2,800 பேர் கைது செய் யப்பட்டனர்.
துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அவர் பத்திரிகை சுதந்திரம், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ராணு வத்தின் அதிகாரங்களையும் குறைத்து வருகிறார். இதன் கார ணமாக ராணுவத்தில் அவருக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வந்தது.
அதிபர் எர்டோகன் நேற்று முன்தினம் இரவு சுற்றுலாத் தலமான ஏஜியன் பகுதியில் தங்கியிருந்தார். அப்போது ராணுவத்தின் ஒரு பிரிவினர் நள்ளிரவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களை ‘பீஸ் கவுன்சில்’ வீரர்கள் என்று அறிவித்துக் கொண்டனர்.
முதல்கட்டமாக துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு சென்ற புரட்சி படை வீரர்கள் தலை மைத் தளபதி ஜெனரல் ஹுலுசி ஆகாரை சிறைபிடித்தனர். அதைத் தொடர்ந்து துருக்கியின் அரசு ஊடகமான டி.ஆர்.டி. செய்தி நிறு வனத்தை தங்கள் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்தனர்.
அதேநேரத்தில் அதிபர் எர்டோகன் தங்கியிருந்த ஏஜியன் பகுதி ஹோட்டலில் போர் விமானம், ஹெலிகாப்டர் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் அதிபர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல அங்காராவில் உள்ள நாடாளுமன்ற வளாகம், அதிபர் மாளிகை மீதும் குண்டுகள் வீசப்பட்டன. அந்த வளாகங்களை கைப்பற்ற புரட்சிப் படை வீரர்கள் முயற்சி செய்தனர்.
இதனிடையே துருக்கியின் வர்த்தக நகரான இஸ்தான்புல்லை யும் புரட்சிப் படை வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆசியாவையும் ஐரோப் பாவையும் இணைக்கும் போஸ் போரஸ் பாலத்தில் தடைகளை ஏற்படுத்தினர்.
அங்காரா, இஸ்தான்புல் உள் ளிட்ட நகரங்களில் ராணுவ கவச வாகனங்கள் ரோந்து சுற்றி வந்தன. வானில் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன. தலைநகர் அங்காரா உள்ளிட்ட பெருநகரங்களில் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று புரட்சிப் படை வீரர்கள் அறிவித்தனர்.
அதிபர் எர்டோகன் அழைப்பு
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை அறிந்த அதிபர் எர்டோகன் நள்ளிரவில் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் பேசினார். பொது மக்கள் யாரும் வீட்டில் முடங்க வேண்டாம். சாலை, தெருக்களில் இறங்கி, புரட்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு எதிராக ஆக்ரோஷ மாக போரிடுங்கள் என்று அழைப்பு விடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஆளும் ஏ.கே. கட்சி மட்டுமன்றி எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள் தலைமையில் பொதுமக்கள் சாலையில் இறங்கி ராணுவ வீரர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புரட்சி முறியடிப்பு
அங்காராவின் சாலைகளில் ரோந்து சுற்றிய பீரங்கி வாகனங் களை பொதுமக்கள் நிராயுதபாணி யாக மறித்து சிறைபிடித்தனர். அப்போது புரட்சிப் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் பொது மக்களில் பலர் உயிரிழந்தனர்.
ஆனால் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்ததால் ராணுவ வீரர்களால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. பல இடங்களில் பீரங்கிகளின் மீது ஏறிய பொதுமக்கள், ராணுவ வீரர்களை அடித்து நொறுக்கினர்.
புரட்சிப் படை வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடைபெற்றது. இதில் புரட்சிப் படையைச் சேர்ந்த 100 வீரர்கள் உயிரிழந்தனர். அதிபர் எர்டோ கனின் ஆதரவாளர்கள் 165 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 போலீஸாரும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் அடங்குவர். ஒட்டு மொத்தமாக 265 பேர் பலியாயினர்.
இருதரப்பிலும் 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ராணுவ புரட்சியில் ஈடுபட்டதாக 2,800-க்கும் மேற்பட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
2,745 நீதிபதிகள் நீக்கம்
துருக்கி நீதித்துறையைச் சேர்ந்த பல்வேறு நீதிபதிகளும் ராணுவ புரட்சிக்கு ஆதரவு அளித் ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டு நீதித் துறையின் உயர்நிலைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 2,745 நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ராணுவத்தில் இருந்து 29 கர்னல்கள், 5 தளபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இஸ்தான்புல் திரும்பினார்
ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டவுடன் அதிபர் எர்டோகன், விமானம் மூலம் இஸ்தான்புல் நகருக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசியபோது, ராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டுள்ளது. ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட முயன்றவர்கள் கடும் விளைவுகளைச் சந்திப் பார்கள் என்று எச்சரித்தார். பாது காப்பு கருதி அவர் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.