

தெற்கு சூடானில் ஐ.நா அமைதிப் படையில் பணியாற்றும் இந்திய அமைதிப்படை வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகளைக் காப்பாற்றினர். எனினும் ஐ.நா. ராணுவ அதிகாரி உள்பட12-க்கும் மேற்பட்ட அகதிகள் காயமடைந்தனர்.
தெற்கு சூடானில் நடைபெறும் உள்நாட்டுப் போரால் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. அகதிகள் முகாம்களில் சுமார் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளனர். மலாகல் நகரில் உள்ள ஐ.நா. முகாமில் சுமார் 100 அகதிகள் உள்ளனர். எண்ணெய் வளமிக்க அந்த நகரைக் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர அரசுப் படைகளுக்கும் எதிர்ப்புப் படை களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. கடந்த புதன்கிழமை ஐ.நா. முகாம் அமைந்துள்ள இடம் அருகே இருதரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
இந்தச் சண்டையில் ஐ.நா. முகாமில் தஞ்சமடைந்திருந்த 12-க்கும் மேற்பட்ட அகதிகள் காயமடைந்தனர். ஐ.நா. ராணுவ அதிகாரி ஒருவரும் காய மடைந்தார். ஐ.நா. முகாமில் தஞ்சம் கேட்டு வந்திருந்த ஒரு இளைஞரும் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து முகாமில் தங்கியுள்ள அகதிகளைக் காப்பாற்ற அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய அமைதிப் படை வீரர் கள் துப்பாக்கியால் சுட்டு இருதரப்பினரையும் விரட்டி யடித்தனர்.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா. முகாம் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படவில்லை, இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் ஐ.நா. முகாமில் இருந்த அகதிகள் காயமடைந்துள்ளனர். அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் படுகிறது என்று தெரிவித்தார். இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் நிருபர் களிடம் பேசியபோது, அகதிகள் காயமடைந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் சர்வதேச சமு தாயத்துக்கு கண்டிப்பாக பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.
டிசம்பர் இறுதியில் அகோபா என்ற இடத்தில் உள்ள ஐ.நா. முகாம் மீது 2000-க்கும் மேற்பட்ட அரசு எதிர்ப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு பணியில் இருந்த 43 இந்திய அமைதிப்படை வீரர்கள் தீரத்து டன் எதிர்த்துப் போரிட்டு 2000 பேரையும் விரட்டியடித்தனர். இதில் 5 இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.