

ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பரில் நடை பெற்ற ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான யோகா கலையை உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும், இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உலக யோகா தினத்தை ஆண்டுதோறும் அனுசரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் மோடியின் யோசனையை செயல்படுத்தும் நடவடிக்கைகளை ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஐ.நா.வில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்திய பிரதிநிதி பிரகாஷ் குப்தா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த யோகா உதவுகிறது என்று இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. யோகா நமது வாழ்வியலை மாற்றுகிறது. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள உதவுகிறது. உடல், மன ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கிறது.
இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூன் 21-ம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று பிரகாஷ் குப்தா கேட்டுக் கொண்டார்.