Last Updated : 03 Jun, 2017 09:26 AM

 

Published : 03 Jun 2017 09:26 AM
Last Updated : 03 Jun 2017 09:26 AM

அமெரிக்க ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி இந்திய வம்சாவளி சிறுமி சாதனை

ஆங்கிலத்தில் சொற்களை எழுத்துக்கூட்டி சரியாக உச்சரிக்கும் (ஸ்பெல்லிங் பீ) தேசிய போட்டி யில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 12 வயது சிறுமி அனன்யா வினய் வெற்றி பெற்று பரிசுப் பணம் ரூ.26 லட்சத்தை தட்டிச் சென்றார். இப்போட்டியில் தொடர்ந்து 13-வது முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே வெற்றிப் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

கலிபோர்னியா மாகாணத்தின் ஃபிரெஸ்நோ நகரில் 6-ம் வகுப்பு படித்து வரும் அனன்யா இப்போட்டியில் பல்வேறு சுற்று களைக் கடந்து இறுதிச் சுற்றில் மற்றொரு இந்திய வம்சாவளி மாணவரான ரோஹன் ராஜீவ் என்பவருடன் மோதினார். பட்டுத் துணியில் நெய்யப்படும் மரோகெயின் என்ற வார்த்தையை சரியாக உச்சரித்து அனன்யா இப்போட்டியில் வென்றார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘எனது கனவு நனவாகிவிட்டது. இப்போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். வார்த்தைகள் மீது சற்று அதிக கவனம் செலுத்தி, அதைச் சரியாக உச்சரிக்க முயற்சித்தேன். வெற்றி என் வசமாகிவிட்டது’’ என்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நடந்து வரும் இப்போட்டியில் அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் இருந்து சுமார் 291 பேர் கலந்து கொண்டனர். அதில் 40 பேர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு 15 பேர் இறுதிச் சுற்றுக்கான போட்டிகளில் பங்கேற்றனர். தொலைக்காட்சியில் நேரலை மூலம் நடத்தப்பட்ட இப்போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

இந்த ஆண்டுக்கான போட்டியில் பெரும்பாலான போட்டியாளர்கள் அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் இருந்து பங்கேற்றனர். எஞ்சியவர்கள் அனைவரும் பஹாமாஸ், கனடா, கானா, ஜமைக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x