

"இலங்கையில் சிங்களவர்களே ராஜபக்ஷவுக்கு எதிராக ஆவேசப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போது மாகாணங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்த பிறகு, இந்த எதிர்ப்புக் குரல் வேகமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. எனவே ராஜபக்ஷ இனியும் இலங்கையில் தாக்குப் பிடிப்பது கடினம்!" இப்படிப்பட்ட பல்வேறு தகவல்களை சொல்கிறார் கூடலூர் விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான எம்.எஸ். செல்வராஜ்.
சிரிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தில் தாயகம் திரும்பிய தமிழர்களில் ஒருவரான இவர், சமீபத்தில் மூன்று வார காலம் அமைப்பு முறை பயணமாக இலங்கை சென்றார். அங்கு பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு பலதரப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேசியுள்ளார். இலங்கைப் பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து....
"தெற்காசிய விவசாய மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்த மூன்று நாள் கருத்தரங்கம் கண்டி அருகே கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அதில் தமிழகத்திலிருந்து நான் ஒருவன் மட்டுமே. அந்தக் கருத்தரங்கம் முடிந்த பிறகும் பல்வேறு பகுதிகளை கிட்டத்தட்ட மூன்று வார காலம் சுற்றிப் பார்த்து மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசி வந்தேன்.
அங்கே தமிழ் மக்களைவிட சிங்கள மக்கள்தான் ராஜபக்ஷவுக்கு எதிராக இருக்கிறார்கள். சில சிங்களர்கள் ராஜபக்ஷவுக்கு எதிராக கிளர்ந்து நிற்கிறார்கள். காரணம் இங்கே போருக்குப் பிறகு மக்களை நேரடியாக பாதிப்பது விலைவாசி உயர்வு.
போருக்கு முன்பு ரூ.80, ரூ100 என்று விற்கப்பட்ட சாப்பாட்டு அரிசி இப்போது கிலோ ரூ.200க்கும் மேல் எகிறிவிட்டது. மற்ற உணவுப் பொருட்களும், காய்கறிகளும் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு உயர்ந்துவிட்டது. போரில் ஏற்பட்ட இழப்புக்களை காரணம் காட்டி அரசு மற்றும் தோட்டத் தொழிலா ளர்களுக்கான பென்ஷன், பணிக்கொடை ஆகிய சலுகை உரிமைகளில் கைவைக்கத் தொடங்கிவிட்டது அரசு.
பென்ஷன் திட்டம் ரத்து
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பேருந்து, ரயில்வே தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டத்தை சிங்கள அரசு அறவே ரத்து செய்தும், சில தொழிலாளர்களுக்கு அத்திட்டத்தில் பெறக்கூடிய சலுகைத் தொகையைக் குறைத்தும் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதற்கு எதிராக மாபெரும் தொழிலாளர் போராட்டம் வெடித்தது. அதில் ஆடிப்போன ராஜபக்ஷ அரசு, வேற வழியில்லாமல் இந்த புதிய சட்டத்தை வாபஸ் பெற்றது. இதைப்பற்றி என்னிடம் பேசிய இடதுசாரி இயக்கங்களில் ஒன்றான நவ்சமசமாஜ் கட்சியின் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ரசீதன் என்பவர், இந்த அரசு தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல; ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிராகவே செயல்படும் அரசு. ஊழலுக்கும், லஞ்ச லாவண்யத்துக்கும் துணைபோகும் அரசு. இயற்கை வளம் நிரம்பிய எங்கள் நாட்டை அந்நிய நாடுகளுக்கு தாரை வார்த்துவிட்டார்!’ என்ற எதிர்ப்புக்குரலை வெளிப்படுத்தினார்.
அதே கோபம் நான் பேசிய அத்தனை தோழர்களிடமும் காணமுடிந்தது. எதற்கெடுத் த்தாலும் தமிழர்களுக்கு எதிராக நடந்த போரையே காரணம் காட்டி மக்களுக்கு விலைவாசி சுமையை வரிச்சுமையை ஏற்றுகிறார். சலுகைகளைப் பறிக்கிறார். அதை நாங்கள் எத்தனை காலம்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? அதை வைத்து எங்களை ரொம்ப காலம் ஏமாற்ற முடியாது!’ என்று சி்ங்களவர்களே சொல்கிறார்கள்.
வேலையில்லாத் திண்டாட்டம்
இலங்கையில் எங்கு பார்த்தாலும் வேலை இல்லாமல் அலைமோதும் இளைஞர்களை காணமுடிகிறது. அவர்கள் கோபம் எந்த நேரமும் அரசுக்கு எதிராக வெடிக்கலாம் என்கிற நிலையே காணப்படுகிறது. இது இப்படி என்றால் தமிழர்களுக்கு எதிராக போர் நடந்து முடிந்த வடக்கு மாகாண நகரங்கள், கிராமங்கள், காடுகள் எல்லாவற்றிலும் ராணுவமே நிறைந்து காணப்படுகிறது.
வவுனியா, பாரதிபுரம் பகுதிகளில் நேரடியாக போய்ப் பார்த்தபோது அங்கிருந்த தமிழ் குடும்பங்கள் விரட்டியடிக் கப்பட்டிருந்தார்கள். அதற்கு பதிலாக முஸ்லிம் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருக்க தமிழர் களுக்கும், இவர்களுக்கும் வன்மம் வெடிக்கும் சூழலை காணமுடிந்தது என்று அவர்கள் வேதனைப்பட்டார்கள்" என்றார் செல்வராஜ்.