

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைய 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர் என்று பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாண சட்ட அமைச்சர் ரானா சனுல்லா கூறும்போது, "மத்திய கிழக்கு நாடுகளில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் உருவெடுத்ததிலிருந்து, பாகிஸ்தானிலிருந்து பெண்கள் உள்பட 100 பாகிஸ்தானியர்கள் சிரியா மற்றும் இராக்கில் ஊடுருவியுள்ளனர்.
பாகிஸ்தானில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் வேரூன்றாமல் இருக்க அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு செய்துவருகிறது. பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் 8 ஜிகாதிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் ஜமாத்-உத்-தாவா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள்.
ஏற்கெனவே ஐஎஸ் இயக்கத்துக்கு தொடர்புடையதாக 40க்கும் அதிகமானோரை கைது செய்துள்ளோம். இதில் ஐஎஸ் இயக்கத்தின் இஸ்லாமாபாத் தலைமையில் இருந்த ரானா சனுல்லா, துணை தலைவர் அப்துல்லா மன்சூரி, சிந்து மாகாணத்துக்கான தலைவர் ஒமர் கத்தியோ ஆகியோர் அடங்குவர்" என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தங்களது நாட்டில் ஆதிகாரபூர்வமாக ஐஎஸ் தீவிரவாதம் இல்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டது. இருப்பினும் மறைமுகமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்தவர்களை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு போலீஸார் பல்வெறு சந்தர்ப்பங்களில் கைது செய்துள்ளனர்.