Last Updated : 02 Jun, 2017 12:42 PM

 

Published : 02 Jun 2017 12:42 PM
Last Updated : 02 Jun 2017 12:42 PM

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா: இந்தியா, சீனா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது குறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறும்போது, "பாரீஸ் ஒப்பந்தத்தால் அமெரிக்காவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் ஒருதலைபட்சமாக உள்ளது, அமெரிக்கா ஏகப்பட்ட பில்லியன் டாலர்கள் தொகையை செலவழிக்கிறது. ஆனால் இந்தியா, சீனா போன்ற பிற நாடுகளே பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தால் பயனடைக்கின்றன.

பாரீஸ் ஒப்பந்தத்தால் 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி இரட்டிப்பாகும். மேலும் நிலக்கரி சுரங்கங்களை கட்டுவதற்கும் சீனாவுக்கு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்கா எதையும் செய்ய முடியாது.

நான் அமெரிக்காவுக்கு பணிபுரிவதற்காகவே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். பாரீஸ் ஒப்பந்ததிற்காக அல்ல. அமெரிக்கா வரிசெலுத்தும் மக்களுக்கு நேர்மையாக நடந்து கொள்ள விரும்புகிறது.

நான் அமெரிக்க மக்களுக்காக தினமும் சண்டையிடுகிறேன். அமெரிக்காவையும், அமெரிக்க மக்களையும் பாதுகாப்பதே என்னுடைய முதல் பணி. எனவே, அமெரிக்கா பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது தொடர்பாக பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் அதிபர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் உலக தலைவர்கள் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் - விவரம்:

பாரீஸ் ஒப்பந்தம் பருவ நிலை ஒப்பந்தம் 2015- ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டு, 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 175 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு. மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் நாடுகள் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

அமெரிக்காவை பொறுத்தவரை அந்நாடு கரியமில வாயுக்களை அதிகமாக வெளியேற்றும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் நிலக்கரி நிலையங்களை மூடுதல் போன்றவற்றை பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு வலியுறுத்துகிறது. இந்த விதிமுறை கரியமில வாயுகளை அதிகமாக வெளியேற்றும் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்க இணைந்தது. ஆனால் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் பாரீஸ் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதாரத்தில் முடக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறிவந்தார்.

இந்த நிலையில் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x