மனிதகுண்டு தாக்குதலை தடுத்த மாணவருக்கு மலாலா புகழாரம்

மனிதகுண்டு தாக்குதலை தடுத்த மாணவருக்கு மலாலா புகழாரம்
Updated on
1 min read

பாகிஸ்தானில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் தற்கொலைப்படை தாக்குதலைத் தடுக்க முயன்ற போது குண்டுவெடித்து இறந்த மாணவனுக்கு பெண் கல்விக்காக போராடும் சிறுமி யூசுப்சாய் மலாலா புகழாரம் சூட்டி உள்ளார்.

கைபர் பக்துன்கவா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த திங்கள்கிழமை தாக்குதல் நடத்த வந்த தீவிரவாதியை, அப்பள்ளி மாணவரான அய்த்ஜாஸ் ஹசன் (15) நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தி உள்ளார். இதையடுத்து அந்த நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், அந்த தீவிரவாதியும் ஹசனும் இறந்தனர்.

இதுகுறித்து மலாலா விடுத்துள்ள அறிக்கையில், "துணிச்சலும் வீரமும் மிக்க ஹசன், தனது உயிரை தியாகம் செய்து, நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிக் குழந்தைகள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தி உள்ளார். தன்னுடைய நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அமைதியை நிலைநாட்ட தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாணவரின் வீரத்துக்கு பாராட்டுகள்" என இன்று கூறியுள்ளார்.

ஹசனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளதுடன், அவருக்கு உயரிய தேசிய விருது வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசை மலாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் மலாலாவை பள்ளிக்குச் சென்று திரும்பியபோது தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த மலாலாவுக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்மூலம் இவர் உலக அளவில் பேசப்படுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in