Published : 17 Sep 2016 10:02 AM
Last Updated : 17 Sep 2016 10:02 AM

சீனாவின் 2-வது விண்வெளி ஆய்வுக் கூடம்: வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

சீனாவின் 2-வது விண்வெளி ஆய்வுக் கூடம் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டுள்ளது.

கடந்த 2011 செப்டம்பரில் தியன்கோங்-1 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை சீனா விண்ணில் செலுத்தியது. அந்த ஆய்வு கூடத்தில் 2012 ஜூன், 2013 ஜூனில் சீன விண்வெளி வீரர்கள் 8 நாட்கள் மற்றும் 12 நாட்கள் தங்கியிருந்துவிட்டு பூமிக்கு திரும்பினர். அதன் ஆயுட்காலம் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. அது அடுத்த ஆண்டு பிற்பகுதியில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தியன்கோங்-2 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி யது. ஜியுகுவான் விண்வெளி மையத்தில் இருந்து ‘மார்ச் 2எப்’ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட அந்த விண்வெளி ஆய்வுக் கூடம் பூமியில் இருந்து 393 கி.மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்த ஆய்வுக் கூடத்துக்கு வரும் அக்டோபரில் 2 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அவர்கள் தியான்கோங்-2 ஆய்வு கூடத்தில் 30 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

சீன விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமிக்கு பத்திரமாக திரும்ப ஏதுவாக புதிய விண்கலத்தை அந்த நாடு ஏற்கெனவே தயார் நிலையில் வைத்துள்ளது. ‘மார்ச் 7’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம் கடந்த ஜூனில் ஆட்கள் இல்லாமல் விண்வெளி சென்றுவிட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. அதில்தான் சீன விண்வெளி வீரர்கள் தியன்கோங் 2 ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட உள்ளனர்.

அடுத்த கட்டமாக வரும் 2022-ம் ஆண்டில் விண்வெளியில் நிரந்தர ஆய்வுக் கூடத்தை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x