Published : 07 Dec 2013 09:40 AM
Last Updated : 07 Dec 2013 09:40 AM

ரூ.1.2 கோடிக்கு விற்பனையான மண்டேலாவின் புகைப்படம்

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் புகைப்படம் ஒன்று அவர் இறப்பதற்கு 2 நாள்களுக்கு முன்பு 1 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு (20 லட்சம் ரேண்ட்) விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

அறக்கட்டளை பணிகளுக்கு நிதி திரட்டுவதற்காக தென் ஆப்பிரிக்காவின் 21 தலைவர்களின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டன. ஆட்ரியன் ஸ்டெய்ன் என்ற புகைப்பட கலைஞர் கண்ணாடியில் மண்டேலாவின் முகம் பிரதிபலிப்பதை படம் பிடித்திருந்தார். இந்த தொகுப்பில் மண்டேலாவின் குறிப்பிட்ட அந்த புகைப்படம் முதலில் இடம்பெற்றிருந்தது.

இந்த புகைப்படத்தை எடுத்த ஆட்ரியன் ஸ்டெய்ன் கூறுகையில், “மண்டேலா, 27 ஆண்டுகள் அரசியல் கைதியானதில் இருந்து, 1994ல் அவர் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் முதல் அதிபராக ஆனது வரை அவரது வாழ்க்கைப் பயணம் குறித்த தொகுப்புக்காக இந்த புகைப்படத்தை எடுத்தேன்” என்றார்.

தென் ஆப்பிரிக்க புகைப்படம் ஒன்று இத்தகைய விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை. இதனை வாங்கியவர் தென் ஆப்பிரிக்கர் அல்ல. கலைப் பொருள்கள் சேகரிக்கும் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒருவர் ஏலத்தில் இந்தப் படத்தை வாங்கினார்.

ஜோகன்னஸ்பர்க் நகரில் நெல்சல் மண்டேலா குழந்தைகள் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கும், உலக வன உயிரினங்கள் நல நிதிக்கும் புகைப்பட விற்பனைத் தொகை பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x