

பாகிஸ்தான் சிறையில் இந்தியர் சரப்ஜித் சிங் கொல்லப்பட்ட வழக்கில் சிறை உயரதிகாரிக்கு எதிராக கைது உத்தரவை அந்நாட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
1990-ல் பாகிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த வழக்கில் சரப்ஜித் சிங் என்ற இந்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தம்பா, முதாஸ்ஸர் என்ற சக கைதிகள் இருவரால் சிறையில் சரப்ஜித் சிங் கடந்த 2013-ல் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் நீதிமன்றம் தொடர்ந்து சம்மன் அனுப்பியும் கோட் லக்பத் சிறையின் துணை கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய கைது உத்தரவை லாகூர் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி நேற்று முன்தினம் பிறப்பித்தார்.
நீதிமன்றத்தில் சிறையின் உதவி கண்காணிப்பாளர் நாளை (பிப். 17) ஆஜராவதை உறுதி செய்யுமாறு லாகூர் காவல் துறை தலைவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.