

நைஜீரியாவில் செயல்படும் போகோ ஹராம், அதன் துணை அமைப்பான அன்சாரு ஆகியவற்றை பயங்கரவாத குழுக்களாக அறிவித்துள்ளது அமெரிக்கா.
பல மாதங்களுக்கு முன்பே இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் இப்போதுதான் அதன் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
தனி இஸ்லாமிய அரசை ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கத்துடன் போராடி வந்த இந்த அமைப்பினர் வடகிழக்கு மற்றும் மத்திய நைஜீரியா பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்க காரணமாக இருந்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பயன்படுத்தி இந்த இரு அமைப்புகளையும் ஒடுக்க நைஜீரியா முன்வரவேண்டும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரு குழுக்களும் 2009ம் ஆண்டிலிருந்து ஏராளமானோரின் உயிர்களை பறித்துள்ளன. இந்த பிராந்தியத்தின் பல நாடுகளிலும் இவற்றின் செயல்கள் பரவும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதிகளுக்கு எதிராக நைஜீரிய அரசு கடந்த மே மாதத்தில் ராணுவ நடவடிக்கையை தொடங்கியதால் சுமார் 37 ஆயிரம் பேர் இந்த பிராந்தியத்திலிருந்து தப்பி ஓடினர் என்று ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அறிவிப்பை அடுத்து இந்த பயங்கரவாத அமைப்புகளுக்கும் அமெரிக்க நிதி நிறுவனங்களுக்கும் இடையிலான பரிவர்த்தனை முடிவுக்கு வருகிறது. மேலும் இந்த அமைப்புகளின் பெயரில் அமெரிக்காவில் உள்ள சொத்துகள் முடக்கப்படும்.
இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ள நைஜீரியா, உளவு சேகரிப்புக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு கொடுக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்க நைஜீரியாவுடன் இணைந்து அமெரிக்க அரசு பாடுபடுவதற்காக பாராட்டுகிறோம் என்று அபுஜாவில் பேட்டி அளித்தார் நீதித்துறை அமைச்சர் முகம்மது அடோக்.
போகோ ஹராம் அமைப்பின் தலைவர் அபுபக்கர் ஷேகாவை கைது செய்ய உதவிடக்கூடிய தகவல் கொடுத்தால் 70 லட்சம் டாலர் வெகுமதியாக தரப்படும் என்று கடந்த ஜூலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்த போதிலும் அந்த அமைப்பை பயங்கரவாத குழுவாக அறிவிக்காமல் விட்டுவிட்டது வியப்பிலாழ்த்தியது. இந்நிலையில் அந்த அமைப்புகளின் செயல்பாடுகளை முழுமையாக புரிந்து கொள்ளவே நீண்டகாலம் ஆனதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகோ ஹராம், அன்சாரு ஆகிய இரு குழுக்களும் நைஜீரிய பயங்கரவாத அமைப்புகள்தான் என்றாலும் இவற்றுக்கு அல் காய்தாவின் வடக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க பிரிவுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜேன் பிசாகி.