4 சிறுநீரகங்கள் கொண்ட 17 வயது பெண்: சீனாவில் அதிசயம்

4 சிறுநீரகங்கள் கொண்ட 17 வயது பெண்: சீனாவில் அதிசயம்
Updated on
1 min read

சீனாவில் 17 வயது இளம்பெண் உடலில் 4 சிறுநீரகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சியோலின் என்ற இந்த பெண்ணுக்கு பிறந்ததிலிருந்தே 4 சிறுநீரகங்கள் இருந்துள்ளன. இதனால் அவருக்குப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சிலகாலமாக கடும் முதுகுவலி ஏற்பட மருத்துவமனைக்கு ஆலோசனைக்காகச் சென்றார்.

இதற்கு ஸ்கேன் எடுக்கும்போது இவருக்கு 4 சிறுநீரகங்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இது ஒருவகை நோய் என்றே இது தொடர்பான மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 1,500 பேரில் ஒருவருக்குத்தான் இதனால் மரணம் ஏற்படும் என்று கூறும் மருத்துவர்கள், சிலருக்கு இத்தகைய நோய் இருப்பது தெரியாமலே முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடித்துள்ளனர் என்கின்றனர்.

ஆனால் இந்த கூடுதல் கிட்னியால் எந்த விதப் பயனுமில்லை. ஏற்கெனவே செயலில் இருக்கும் கிட்னிகளுடன் இவை தொடர்புடையதால் இவற்றை அகற்றி கிட்னி பழுதடைந்தவர்களுக்கு பொருத்த முடியும் வாய்ப்பு அரிதே என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் இந்தக் கூடுதல் கிட்னிகளை அகற்றுவதும் எளிதல்ல என்கின்றனர்.

எனவே கூடுதல் கிட்னியை அகற்றி, தேவைப்படுவோருக்கு பொருத்துவது என்பதும் முடியாத காரியமே என்று மருத்துவர்கள் கூறினாலும் அவர்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டனர்.

அந்த முயற்சியில், மருத்துவர்கள் பிளாடரையும், கிட்னியையும் இணைக்கும் குழாய் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சியோலினின் கூடுதல் கிட்னிகளை அகற்றியுள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சியோலின் உடல் நிலை நன்றாகத் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in