

ஜெர்மனியின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக உர்சுலா வொன் டெர் லெயன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம் இவருக்கு அடுத்த பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெர்மனியில் சமீபத்தில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. கிறிஸ்டியன் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மெர்க்கல் தலைமையிலான முந்தைய அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த லெயன் இப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகி உள்ளார்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அடுத்து 2017ல் நடைபெற உள்ள தேர்தலில் மெர்க்கல் போட்டியிட மாட்டார் என்றும் இதனால் மெர்க்கல் இடத்தை லெயன் பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது. முந்தைய அரசில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த தாமஸ் டி மெய்ஜீரி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, இவர் 2009 மற்றும் 2011-ல் வகித்து வந்த உள்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முக்கிய கூட்டணிக் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மீர் வெளியுறவுத் துறை அமைச்சராகி உள்ளார். இவர், கடந்த 2005-2009-ல் மெர்க்கல் அரசில் இதே பொறுப்பை வகித்தார். 2009-2013-ல் எதிர்க்கட்சியாக செயல்பட்ட இக்கட்சி இப்போது மீண்டும் ஆளும் அரசில் இணைந்துள்ளது.
இக்கட்சியின் தலைவர் சிக்மர் கேப்ரியல் துணைப் பிரதமராகவும் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் ஏற்கெனவே சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்துள்ளார். மெர்க்கலுக்கு நெருக்கமான உல்ப்காங் ஸ்கூபுள் நிதியமைச்சராகி உள்ளார். ஐரோப்பிய மண்டலத்தில் கடைபிடித்து வரும் கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதில்லை என புதிய அரசு கூறியுள்ளது.
புதிய அமைச்சரவையில் கிறிஸ்டி யன் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தலா 6 பேரும் பவேரியன் கிறிஸ்டியன் சோசியல் யூனியனைச் சேர்ந்த 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.