

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத் தாக்குதலுக்கு 25 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாக சிரியா அரசு தரப்பு செய்திகள் உறுதி செய்துள்ளன.
நீதித்துறை கட்டிடத்தினுள் தற்கொலைத் தீவிரவாதி ஒருவர் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 25 பேர் பலியாகி பலர் காயமடைந்துள்ளனர், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று சிரியா அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
டமாஸ்கஸ் நகரின் பிரபலமான மற்றும் கூட்டம் புழங்கும் ஹமிதியே சந்தைக்கு அருகில் உள்ள நீதித்துறை மாளிகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அசாத்துக்கு எதிராக 2011-ம் ஆண்டு எழுச்சி மூண்டது. இது போகப்போக பெரிய அளவிலான சிவில் யுத்தமானது. இந்த சிவில் யுத்தத்தினால் இந்த 6 ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் பேர் கொல்லப்பட்டு பல லட்சம் மக்கள் இடம்பெயர நேரிட்டுள்ளது.
இந்த சிவில் யுத்தம் ஏற்படுத்திய பெரும் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அல் கய்டா மற்றும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்புகள் அங்கு காலூன்றி விட்டன.
டமாஸ்கஸ் போலீஸ் உயரதிகாரி மொகமது கெய்ர் இஸ்மாய்ல் அரசு தொலைக்காட்சியில் கூறும்போது, ராணுவ உடையில் எந்திர துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் நீதித்துறை கட்டிட வளாகத்திற்குள் நுழைந்த தற்கொலை தாக்குதல் தீவிரவாதி மதியம் 1.20 மணியளவில் குண்டுகளை வெடிக்கச் செய்ததாக தெரிவித்தார்.
அதாவது கட்டிட காவலர்கள் இவரை தடுத்து விசாரித்துள்ளனர், கைது செய்ய முடிவெடுத்த நேரத்தில் தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.
போர்க்களமாகக் காட்சியளிக்கும் அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ளன.