25 இந்திய மாணவர் வெளியேற அமெரிக்க பல்கலை உத்தரவு

25 இந்திய மாணவர் வெளியேற அமெரிக்க பல்கலை உத்தரவு
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம், போதுமான தகுதி இல்லை எனக் கூறி 25 இந்திய மாணவர்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் இந்திய நகரங்களில் முகாம் நடத்தி நேரடி சேர்க்கை என்ற பெயரில் மாணவர்களை சேர்ப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், மேற்கு கென்டகி பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பாடப் பிரிவில் இந்திய மாணவர்கள் 60 பேர் கடந்த ஜனவரி மாதம் சேர்ந்தனர்.

இதையடுத்து அவர்கள் படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றனர். இந்நிலையில், போதுமான தகுதி இல்லை எனக் கூறி தாய்நாட்டுக்கு திரும்புமாறு 25 மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் பாடப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் கேரி கூறும்போது, “இந்த பாடப் பிரிவில் சேர்வதற்கான அடிப்படை தேவையை (தகுதி) சுமார் 40 மாணவர்கள் பூர்த்தி செய்யவில்லை. அதாவது அவர்களுக்கு கணினி புரோகிராம் எழுதத் தெரியவில்லை. பல்வேறு உதவிகளை செய்த போதிலும் அவர்களால் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. எனினும் 35 மாணவர்கள் தொடர்ந்து இங்கேயே படிக்க அனுமதி அளித்துள்ளோம். மீதமுள்ள 25 மாணவர்கள் தாய்நாடு திரும்ப வேண்டும். அல்லது வேறு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கொள்ளலாம்” என்றார்.

இதுகுறித்து மேற்கு கென்டகி பல்கலைக்கழகத்தின் இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஆதித்ய சர்மா கூறும்போது, “மாணவர்கள் பணத்தைச் செலவிட்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், தகுதி இல்லை எனக்கூறி அவர்களை வெளியேறுமாறு கூறுவது கண்டனத்துக்குரியது” என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்து கிறார். பின்னர் அந்நாட்டு நாடாளு மன்றத்தில் மோடி உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in