வெள்ளை மாளிகையில் மோடியை சங்கடத்தில் இருந்து மீட்ட அஜித் தோவல்

வெள்ளை மாளிகையில் மோடியை சங்கடத்தில் இருந்து மீட்ட அஜித் தோவல்
Updated on
1 min read

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நிருபர்களைச் சந்திக்கும்போது பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட சங்கடத்தில் இருந்து தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் மீட்டது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி போர்ச்சுகல் பயணத்தை முடித்துக் கொண்டு 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். ஞாயிற்றுக்கிழமை இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடிய மோடி, திங்கள்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் முதல் முறையாக சந்தித்தார்.

இருவரும் கூட்டாக இணைந்து வெள்ளை மாளிகையில் உள்ள ரோஸ் கார்டனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசுவதற்காக உரை தயாரிக்கப்பட்டு மோடியின் கைகளில் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக பலத்த காற்று வீசியதால், அவரின் கைகளில் இருந்து சில பக்கங்கள் காற்றில் பறந்து சென்றன.

அங்கே முதல் வரிசையில், மற்ற மூத்த இந்திய அதிகாரிகளோடு தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் அமர்ந்திருந்தார். உடனடியாக விரைந்த தோவல் காற்றில் பறந்த பக்கங்களை மீட்டு, பிரதமர் மோடியிடம் அளித்தார்.

மீண்டும் கைவரிசையை காட்டிய காற்று

ஆனால் சில நிமிடங்களிலேயே திரும்பவும் காற்று தன் கைவரிசையைக் காட்டியது. இதனால், மீண்டும் மோடியின் கைகளில் இருந்த காகிதங்கள் பறந்தன. உடனடியாக அவற்றை மீட்டு, பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார் தோவல்.

இதனால் இரு நாடுகளில் தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்து அளித்த பத்திரிகையாளர் சந்திப்பில் மோடிக்கு ஏற்பட இருந்த சங்கடம் தவிர்க்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in