மலேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜப்பான் தடை

மலேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜப்பான் தடை
Updated on
1 min read

ஜப்பானுக்குள் நுழைய அனுமதியில்லை என்று கூறி மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் திருப்பி அனுப்பப்பட்டார். ஜப்பானின் இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அன்வர் இப்ராஹிம் கூறினார்.

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள நாரிடா சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அன்வர் இப்ராஹிமை, நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை எனக் கூறி குடியேற்றத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். பாலியல் புகார், ஊழல் குற்றச்சாட்டு தொடர் பான வழக்குகளில் 1999-ம் ஆண்டு அவர் தண்டனை பெற்றுள்ளதைக் காரணம் காட்டி அவரை நாட்டுக் குள் அனுமதிக்க ஜப்பான் மறுத்து விட்டது.

இதையடுத்து மற்றொரு விமானத்தில் அவர் உடனடியாக மலேசியாவுக்கு திரும்பினார். கருத்தரங்கில் பங்கேற்க வருமாறு ஜப்பானில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனம் விடுத்த அழைப்பின் பேரிலேயே அவர் அந்நாட்டுக்குச் சென்றிருந்தார்.

தன்னை ஜப்பானுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டது குறித்து அன்வர் இப்ராஹிம் கோலாலம்பூரில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: இந்த சம்பவத்தால் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளேன். இது தொடர்பாக மலேசிய அரசு விசாரணை நடத்த வேண்டும். வழக்கில் என்னை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளதால்தான் அனுமதிக்கவில்லை என ஜப்பான் கூறுவது உண்மையான காரணம் அல்ல.

ஏனெனில், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று முறை எந்தவிதமான பிரச்சினையுமின்றி ஜப்பான் சென்று வந்துள்ளேன். அதோடு இந்த முறை ஜப்பான் புறப்பட்டபோது, மலேசியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் எந்தவிதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. ஆனால், ஜப்பான் சென்ற பிறகுதான் தடுத்து நிறுத்தியுள்ளனர். என்னை ஜப்பானுக்குள் செல்ல விடாமல் தடுக்க மறைமுகமாக சிலர் செயல் பட்டுள்ளனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in