

சார்க் மாநாட்டை நடத்த தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 19 வீரர்கள் பலியாயினர். இதனிடையே, கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தானில் 19-வது சார்க் உச்சி மாநாடு நடைபெற இருந்தது. ஆனால், தீவிரவாதிகளை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானைக் கண்டிக்கும் வகையில் இந்த மாநாட்டை இந்தியாவைப் பின்பற்றி மேலும் சில நாடுகள் புறக்கணித்தன. இதனால் சார்க அமைப்புக்கு தலைமை வகிக்கும் நேபாளம் மாநாட்டை ரத்து செய்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், விரைவில் ஓய்வு பெற உள்ள சார்க் அமைப்பின் செயலாளர் அர்ஜுன் பஹதுர் தாபாவை சந்தித்துப் பேசி உள்ளார்.
அப்போது, “சார்க் உச்சி மாநாட்டை நடத்த ஆவலாக இருந் தோம். ஆனால் அதை இந்தியா புறக்கணித்ததால் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே, அந்த மாநாட்டை விரைவில் நடத்த தயாராக உள்ளோம். இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உறுப்பு நாடுகளின் உள்நாட்டு பிரச்சினை மற்றும் இரண்டு உறுப்பு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை காரணமாக சார்க் அமைப்புக்கு பாதிப்பு ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது” என தாபாவிடம் அஜிஸ் வலியுறுத்தி உள்ளார்.