

உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலை யில், அதுதொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்படும் என இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின்போது ராணுவத்தின் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் பங்கேற்ற அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, உண்மை கண்டறியும் குழு வரும் செப்டம்பரில் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், போரின்போது காணாமல் போனவர்களைக் கண்டறிய நிரந்தரமான, தன்னாட்சி பெற்ற அமைப்பும் நிர்மாணிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு இலங்கை பதிலளிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்தே தன்னாட்சி அமைப்பு அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரிய சின்ஹா கூறும்போது, “உண்மை கண்டறியும் குழுவும், நீதித் துறை அமைப்பும் வரும் அக்டோபர் மத்தியில் அமைக்கப்படும். இந்த நடவடிக்கைகள் தொடர்பாக அரசும் அரசு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின் றன. ஐ.நா. மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்புடன் இப்பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடனும் மிக நெருக்கமாக இணைந்து செயலாற்றி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.