Published : 30 Nov 2013 12:00 AM
Last Updated : 30 Nov 2013 12:00 AM

சர்ச்சைக்குரிய பகுதிக்கு போர் விமானங்களை அனுப்பியது சீனா

கிழக்கு சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய சென்காகு தீவுகளை உள்ளடக்கி புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்த சீனா, அங்கு முதல் முறையாக போர் விமானங்களை அனுப்பி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.

கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகளை டியாவோயு தீவுகள் என்று அழைக்கும் சீனா, அவை தனக்கு சொந்தம் என்று கூறி வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகள் இடையே உரசல் இருந்து வருகிறது.

இந்நிலையில் சீனா கடந்த சனிக்கிழமை தனது வான் எல்லையை விரிவாக்கும் வகையில், சர்ச்சைக்குரிய தீவுகளை உள்ளடக்கி புதிய வான் பாதுகாப்பு மண்டலம் அறிவித்தது. இப்பகுதி வழியே பறக்கும் விமானங்கள் அதன் பயணத் திட்டத்தை முன்கூட்டியே சீன அரசிடம் அளிக்க வேண்டும். இல்லாவிடில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என எச்சரித்தது. சீனாவின் இந்த எச்சரிக்கையை ஜப்பானும் அதன் நட்பு நாடுகளும் நிராகரித்தன.

மேலும் சீனாவின் எச்சரிக்கையை நிராகரிக்கும் வகையில், அந்நாடு அறிவித்த புதிய வான் மண்டலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க போர் விமானங்கள் பறந்து சென்றன. இதைத் தொடர்ந்து ஜப்பான், தென் கொரிய விமானங்களும் அப்பகுதியில் பறந்து சென்றன. இந்த விமானங்களை தாங்கள் கண்காணித்ததாக சீனா கூறியது.

இந்நிலையில் புதிய வான் மண்டலம் அறிவித்த பிறகு முதல் முறையாக அப்பகுதியில் சீனப் போர் விமானங்கள் நேற்று முன்தினம் பறந்து சென்றன. இதுகுறித்து சீன விமானப் படை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில், “அனைத்து நாடு களும் தங்கள் வான் பகுதியில் வழக்கமாக மேற்கொள்ளும் கண்காணிப்பு பணியை போல, கிழக்கு சீனக் கடல் பகுதியில் சீனாவின் புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தில் ஜெட் போர் விமானங்கள் வியாழக்கிழமை பறந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன” என்றார்.

“சீனாவின் வான் பகுதியை பாதுகாக்கவும், அச்சுறுத்தல்களை உறுதியுடன் எதிர்கொள்ளவும் எந்நேரமும் விழிப்புடன் இருப்போம்” என்று சீன விமானப் படை வியாழக்கிழமை கூறியது. அதே நாளில் போர் விமானங்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

இதனிடையே கிழக்கு சீனக் கடல் பகுதியில் புதிய வான் மண்டல அறிவிப்பை நாங்கள் வாபஸ் பெற வேண்டுமானால், ஜப்பானும் இதே போன்ற அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என்று சீனா அறிவித்துள்ளது.

சீனா தனது அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷென்ஜோ அபே கூறியிருந்தார். இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், “சீனா தனது அறிவிப்பை வாபஸ் பெறவேண்டுமானால், முதலில் ஜப்பான் இதே போன்ற அறிவிப்பை வாபஸ் பெறட்டும். பிறகு அவர்கள் கோரிக்கை குறித்து 44 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் பரிசீலிக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x