

தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் நிலையில் நிகழ்த்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில், இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா. அமைதிக் காப்பாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
உலகின் புதிய நாடான தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் ஆதரவு படையினருக்கும், எதிர்ப்புக் குழுவினருக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
முன்னாள் துணை அதிபர் ரீக் மாச்சரின் ஆதரவுப் படைகளே ஆட்சியைக் கவிழ்க்கும் இந்த சதிச் செயல் முயற்சியில் ஈடுபட்டதாக தெற்கு சூடான் அதிபர் சால்வா கீர் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்தில் வன்முறையாளர் முற்றுகையிட்டுள்ளனர். அவர்களிடம் ஆயிரக்கணக்கான அலுவலர்களும், பொதுமக்களும் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில், வன்முறையாளர் நிகழ்த்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஐ.நா. அமைதிக் காப்பாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக, ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
1,500-ல் இருந்து 2000 எதிர்ப்பாளர்கள் வரை சூழ்ந்திருக்கும் ஐ.நா. நிலையில் 43 இந்திய அமைதிக் காப்பாளர்கள் இருக்கிறார்கள்.
இதனிடையே, வன்முறையாளர்களிடம் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை இந்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.