

ஆப்கான் தலைநகர் காபூலில் வெளிநாட்டினர் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
7 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் புறநகர் பகுதியில் வெளி நாட்டினர் தங்கியிருக்கும் விடுதியின் மதில் சுவருக்கு அருகே இன்று (திங்கட் கிழமை) அதிகாலை 1.30 மணியளவில் வாகனத்தில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதனால் காபூல் நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் முழ்கியது.
இது குறித்து ஆப்கன் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தவுடன் அவ்விடத்துக்கு பாதுகாப்புப் படையின் சிறப்புப் பிரிவினர் விரைந்து சென்றனர்.
விடுதியின் மதில் சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் இருவரை சுட்டுக் கொன்றனர். இத்தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் தனது உயிரை இழந்தார். மற்றொரு போலீஸ் அதிகாரி காயமடைந்துள்ளார்” என்றார்.
இக்குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தலிபான் தீவிரவாதிகள் வெளிநாட்டினரை மையபடுத்தி இத்தாக்குதலை நிகழ்த்தியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் காபூலில் வாகனம் மூலம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 80 பேர் பலியாகினர். இத்தாக்குதலையும் தலிபான்கள்தான் நிகழ்த்தினர்.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை ஆப்கனில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு 1,601 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.