

சிரியாவில் ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளுக்கும் குர்து படைகளுக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.சிரியாவின் கொபேனி நகரில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நகரைக் கைப்பற்ற ஐ.எஸ். படைகள் முன்னேறி வருகின்றன. அவர்களுக்கு எதிராக குர்து படைகள் தீவிரமாகப் போரிட்டு வருகின்றன.
கடந்த சில நாள்களாக ஐ.எஸ். படைகளின் கை ஓங்கி வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனால் தரைவழி போரில் ஐ.எஸ். கிளர்ச்சிப் படை வலுவாக இருப்பதால் கொபேனி நகரம் அவர்களிடம் விழும் நிலை ஏற்பட்டது.
இதை தடுக்க குர்து படைகளுக்காக வான்வழியாக அமெரிக்க போர் விமானங்கள் ஏராளமான ஆயுதங்களை அள்ளி வீசியது. மேலும் கொபேனி நகரில் குர்து படை வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் துருக்கி எல்லை வழியாக கூடுதல் குர்து படை வீரர்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் துருக்கி அரசு அனுமதி அளிக்க மறுத்துவந்தது. இந்நிலையில் அமெரிக்க தலையீட்டின்பேரில் துருக்கி அரசு நேற்று அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து இராக்கின் வடக்குப் பகுதியில் இருந்து துருக்கி வழியாக சிரியாவின் கொபேனி நகருக்கு குர்து படை வீரர்கள் விரைந்துள்ளனர்.
கொபேனியில் சண்டை தீவிரமடைந்துள்ளதால் அங்கு வசிக்கும் 80 சதவீத மக்கள் நகரை காலி செய்து துருக்கியின் சுரக் நகரில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.