

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக இன்று (திங்கள்கிழமை) பதவியேற்ற சி.வி. விக்னேஸ்வரன், போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் புனரமைப்பதே முக்கிய குறிக்கோள் என்றார்.
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் ராஜபக்ஷே முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விக்னேஸ்வரன் பதவியேற்பு பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
அதிபர் ராஜபக்ஷே முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவியேற்றதை எதிர்த்து, தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள், ஆதரவாளர்கள் விழாவைப் புறக்கணித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வராகப் பதவியேற்ற பின்பு விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் “சிங்கள மொழியும் பாரம்பரியங்களும் சிங்கள மக்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு தமிழ் மொழியும் பாரம்பரியங்களும் எங்களுக்கு முக்கியம். போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் புனரமைப்பதே எனது அரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், முதல்வர் விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, ஈழத் தமிழர் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.