வங்கதேசத்தில் திட்டமிட்டபடி ஜனவரி 5-ல் பொதுத் தேர்தல்

வங்கதேசத்தில் திட்டமிட்டபடி ஜனவரி 5-ல் பொதுத் தேர்தல்
Updated on
2 min read

எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தாலும் அதை பொருட்படுத்தாமல் திட்ட மிட்டபடி ஜனவரி 5ம் தேதி பொதுத் தேர்தல் நடத்த ஆளும் அவாமி லீக் கூட்டணி முடிவு செய்துள்ளது.

ஆளும் கூட்டணியின் ஆலோ சனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா, ‘நாட்டில் அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகள் இடையூறு இல்லாமல் தொடர தேர்தல் நடத்தப்படவேண்டும்’ என்று வலியுறுத்தி யதாக அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார். யார் கலந்து கொள்கிறார்களோ இல்லையோ, திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதாவது நிர்ப்பந்தம் காரணமாக தேர்தல் நடக்க முடியாமல் போனால் அரசமைப்புச் சட்டத்தின்படி அரசு செயல்படும் என்று பிரதமர் கூறிய தாக தி டெய்லி ஸ்டார் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

வங்கதேசத்தில் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி, தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக அறி வித்துள்ளது. ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான ஜாதியா கட்சியும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. முன்னாள் ராணுவ ஆட்சியாளர் எச்.எம். எர்ஷாத் தலைமை யில் செயல்படுகிறது ஜாதியா கட்சி.

இந்த திருப்பங்களுக்கு இடை யில், ஜாதியா கட்சியின் முக்கிய தலைவர்களான அனிசுல் இஸ்லாம் மெஹ்மூத், ஜியாதீன் பப்லு ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்று தேர்தலை திட்டமிட்டபடி நடத்தி முடிக்கவேண்டும் என்று வலியு றுத்தினர் என செய்திகள் தெரி விக்கின்றன.

தேர்தலையொட்டி திருத்தி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்த இரு தலைவர்களும், ‘எர்ஷாத் தனது முடிவை மாற்றிக்கொள்வார்’ என எதிர்பார்ப்பதாக கூட்டத்தில் தெரி வித்தனர்.

இந்நிலையில் தேர்தலை ஒத்திவைப்பதற்காக நிர்பந்தம் கொடுக் கும் நோக்கத்தில் பங்களாதேஷ் தேசியவாத கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ச்சியாக முற்றுகைப் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அக்டோபரிலிருந்து காணப்படும் அரசியல் குழப்ப நிலவரத்தால் ஏற்பட்டுள்ள வன்முறையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம் தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளி யிட்ட பிறகு வன்முறை மேலும் வலுத்தது. ஆளும் அவாமி லீக் கூட்டணியானது தேர்தலை கண்காணிக்க பல்வேறு கட்சிகள் இடம் பெற்ற இடைக்கால அரசு அமைத்தது. இதில் அங்கம்வகிக்க மறுத்த பங்களாதேஷ் தேசியவாத கட்சி கட்சிகள் சேராத இடைக்கால அரசை அமைக்கும்படி யோசனை தெரிவித்தது.

ராணுவ தளபதியுடன் ஆலோசனை

இந்நிலையில் சட்டம், ஒழுங்கை சமாளிக்க, ராணுவ தளபதி, காவல்துறை தலைவர்கள், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை அழைத்து பிரதமர் ஹசீனா செவ்வாய்க்கிழமை இரவு அவசர ஆலோசனை நடத்தினார் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

டாக்காவில் சுஜாதா சிங்

வங்கதேசத்தில் அரசியல் நெருக்கடிமிக்க சூழல் காணப்படும் நிலையில் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்திப்பதற்காக புதன்கிழமை டாக்கா வந்தார் இந்திய வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங். ஆகஸ்ட் மாதத்தில் பதவி ஏற்றபிறகு வங்கதேசத்துக்கு சுஜாதா சிங் வருவது இதுவே முதல்முறை. டாக்கா வந்ததும் பிரதமர் ஷேக் ஹசீனாவை சுஜாதா சிங் சந்தித்தார். முன்னதாக, வெளியுறவு அமைச்சர் அபுல் ஹசன் மகமூத் அலியையும் சந்தித்துப் பேசினார்.

நில எல்லை ஒப்பந்தம்

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்தியா-வங்க தேச நில எல்லை ஒப்பந்தம் தொடர்பான அரசமைப்புச் சட்ட திருத்த மசோதா கொண்டுவர இந்தியா உறுதியாக உள்ளது என்பதை தனது பயணத்தின்போது சுஜாதா சிங் திட்டவட்டமாக தெரிவிக்க உள்ளார் என டெல்லியில் உள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு பாஜக, அசாம் கண பரிஷத் ஆகியவை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த திருத்த மசோதாவின்படி 17,160.63 ஏக்கர் பரப்பு கொண்ட 111 பகுதிகள் வங்கதேசத்துக்கு மாற்றம் செய்யப்படும். 7110 ஏக்கர் பரப்பு கொண்ட 51 பகுதிகள் இந்தியாவுக்கு மாற்றம் செய்யப்படும்.- பி.டி.ஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in