

அமெரிக்காவில் நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடத்த துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கலிஸ், பேஸ் பால் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருவத்துவமனையில் ஸ்காலிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஸ்காலிஸுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 3 நபர்களும் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் போலீஸாரால் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அமெரிக்காவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்காலிஸை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரில் சென்று நலம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது, "இது ஒரு கொடூரமான தாக்குதல். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை தடுக்கவில்லை என்றால் பல உயிர்கள் பலியாகி இருக்கும். நாம் அமெரிக்கர்களாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்டுள்ளோம். நமது குழந்தைகள் பாதுகாப்பான மற்றும் அமைதியான நாட்டில் வளர தகுதியுடையவர்கள். எனவே நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு வலிமையாக இருப்போம்" என்றார்.
(மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்டீவ் ஸ்காலிஸ்)
ஸ்டீவ் ஸ்கலிஸ் குறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஸ்டீவ் எனது சிறந்த நண்பர். தேசப் பற்று மிக்கவர். சிறந்த போராளி. விரைவில் அவர் குணமடைவார். அவருக்கு எனது பிரார்த்தனைகள் துணையிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.