Published : 10 Nov 2013 01:35 AM
Last Updated : 10 Nov 2013 01:35 AM

இலங்கை மீதான போர்க் குற்ற புகார்: தனி விசாரணை கோர கேமரூன் முடிவு

இலங்கையில் 2009-ல் நடைபெற்ற போரின்போது நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் பற்றி பிறரது குறுக்கீட்டுக்கு இடம் தராத வகையில் தனியானதொரு விசாரணை நடத்தவேண்டும் என காமன்வெல்த் மாநாட்டில் வலியுறுத்த உள்ளதாக தெரிவித்திருக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்.



மனித உரிமை மீறல் பற்றிய விவகாரத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்பது போல நடந்து கொள்ளும் இலங்கையை கண்டித்து காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்பது என தான் எடுத்த முடிவு சரியானதே என்று கூறியிருக்கிறார் டேவிட் கேமரூன்.

தமிழர் பெரும்பான்மை மிக்க வடக்கு மாகாணத்துக்கும் இந்த பயணத்தின்போது டேவிட் கேமரூன் செல்லவிருக்கிறார். 30 ஆண்டு காலம் கடுமையாக நிகழ்ந்த இனப்போரை சந்தித்தது இந்த பகுதிதான். இந்த மாகாணத்துக்கு செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை காமன்வெல்த் உச்சி மாநாடு தொடங்குகிறது. அதில் பங்கேற்கும் டேவிட் கேமரூன், லண்டனில் வெளியாகும் 'தமிழ் கார்டியன்' பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:

கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது என நான் எடுத்திருக்கும் முடிவு சரியானதே. 2009ல் நடந்த இறுதி கட்டப்போரில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பாகவும் அதையடுத்த சமாதான நடவடிக்கைகளிலும் இலங்கை எவ்வித முன்னேற்றத்தையும் காட்டவில்லை.

இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் இந்த விவகாரங்களை எழுப்பி சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு கிடைக்கும்.

தேர்தலை நடத்தியது, கண்ணிவெடிகளை அகற்றியது, போரால் புலம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்விடம் அமைத்துக் கொடுப்பது, மறு சீரமைப்புப்பணிகளை மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகளில் முன்னேற்றம் தெரிகிறது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததுதான் என்றாலும் இதுவே போதுமானது என்று சொல்லிவிட முடியாது.

இறுதிக்கட்டப் போரின்போது நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள், இப்போதும் தொடர்வதாக சொல்லப்படும் மனித உரிமை மீறல் சம்பந்தமான புகார்கள் பற்றி வெளிக்குறுக்கீடுகளுக்கு இடம் தராமல் வெளிப்படையாகவும் சுயேச்சையாகவும் விசாரணை நடத்த வேண்டும், கருத்துச் சுதந்திரத்துக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும்,, பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆதரவாளர்களை மிரட்டுவதை கைவிடவேண்டும் என்பது தொடர்பாக இந்த மாநாட்டின் மூலமாக கோரிக்கை வைப்பேன்.

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் போராளிகள் மீது நடத்தியதாக கூறப்படும் கொடுஞ்செயல்களுக்கு பொறுப்பு ஏற்க முன்வராமல் இலங்கை மௌனம் காப்பது, பத்திரிகையாளர்களை மிரட்டுவது போன்ற புகார்கள் பற்றி இலங்கையுடன் வெளிப்படையாக பேசுவது என உறுதியாக இருக்கிறேன் என்று டேவிட் கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வரும் 15 முதல் 17ம் தேதி வரை காமன்வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதை புறக்கணிக்குமாறு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 2009ல் உள்நாட்டுப்போர் முடிந்துவிட்டபோதிலும் மனித உரிமைகள் புகார் தொடர்பான நடவடிக்கைகளிலும் சமாதான நடவடிக்கைகள் விஷயத்திலும் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், அந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

54 நாடுகளை கொண்டது காமன்வெல்த் அமைப்பு. ஆஸ்திரேலியா இந்த அமைப்புக்கு தற்போது தலைமை வகித்து வருகிறது. இலங்கை வசம் இந்த மாநாட்டில் தலைமைப்பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x