

கொட்டிய மழையை யாரும் பொருட்படுத்தவில்லை. கட்டுக்கடங்காத கூட்டம் ஒரு பொருட்டாக இல்லை. உலகத் தலைவர்கள் அத்தனை பேரும் திரண்டு வந்திருக்கும் நேரம். இறந்திருப்பது மண்டேலா அல்ல. தென்னாப்பிரிக்காவின் மனச்சாட்சி.
அப்படித்தான் நினைத்தார்கள் மக்கள். மகாத்மா காந்திக்குப் பிறகு, மார்ட்டின் லூதர் கிங்குக்குப் பிறகு அறப் போராட்டத்தின் அவசியத்தையும் அதை அமைதிப் போராட்டமாக நடத்துவதில் இருக்கிற நிரந்தர லாபங்களையும் நவீன யுகத்துக்கு மறு அறிமுகம் செய்தவர் அவர். பொது வாழ்வில் தூய்மை, அவரது கம்பீரம். 95 வயதில் அவர் காலமானபோது உலகம் முழுதும் வருத்தப்பட்டதற்கு அதுதான் மிக முக்கியக் காரணம்.
105 வயதான தென்னாப்பிரிக்க தேசிய காங்கிரசில் மண்டேலாவின் காலம் ஒரு சகாப்தம். வாழ்நாளில் சுமார் மூன்றில் ஒரு பகுதியை அவர் சிறையில் கழித்திருந்தாலும் ஒரு சக்தியாக அவர்தான் அம்மக்களை இயக்கியிருக்கிறார். நிற வெறி ஆட்சியை ஒழித்தது மட்டுமல்ல; தென்னாப்பிரிக்கா அதுநாள் வரை காணாத நல்லாட்சியை அறிமுகப்படுத்தியவரும் அவரே சுதந்திரமும் சந்தோஷமும். மனிதனுக்கு வேறென்ன வேண்டும்?
இனி மண்டேலா இல்லை. எனவே மிச்சம் என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
நேற்றைக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அஞ்சலிக் கூட்ட மேடையில் ரவூல் காஸ்டிரோவின் கையைப் பிடித்துக் குலுக்கியதல்ல சரித்திரம். அதே கூட்டத்தில் பார்வையாளர்களாகத் திரண்டிருந்த பொதுமக்கள் அத்தனை பேரும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா பேச எழுந்ததில் இருந்து, முடித்து அமரும் வரை அவரை வெறுப்பேற்றித் தள்ளும் விதமாகக் கட்டை விரலைக் கவிழ்த்துக் காட்டியதும் கச்சாமுச்சாவென்று விமரிசனம் செய்ததும், காறித் துப்பாத குறையாக சலித்துக்கொண்டு நகர்ந்து போனதும்தான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.
அதே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவர்தான். மண்டேலா வழி வந்தவர்தான். ஆனால் நீண்ட நெடுநாள் அரசியல் வாழ்க்கையில் அவரை அடையாளப்படுத்துவதற்கு இருப்பதெல்லாம் அவர் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகள்தாம். ஒன்றல்ல இரண்டல்ல. 2005ம் ஆண்டு ஸூமாவின் மீது முதல் முதலில் ஒரு பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டது. பதவியும் அதிகாரமும் அவரை அதிலிருந்து விடுவித்தது.
அதன்பிறகு தொடர்ச்சியாக ஏராளமான சட்ட விரோத காரியங்களுக்காக ஸூமா தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்திருக்கிறார். தவிரவும் இன்றளவும் தென்னாப்பிரிக்காவின் தேசிய அடையாளங்களுள் முதன்மையாக அறியப்படும் ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் அவரே இருக்கிறார்.
எத்தனை வழக்குகள், வாய் தாக்கள், மறக்கடிப்புகள், நீதிமன்ற விளையாட்டுகள்! பதவியில் தொடர்ந்து இருப்பதற்காக ஸூமா மேற்கொள்ளும் முயற்சிகளை நேற்றைக்கு எண்ணிப்பார்த்த தென்னாப்பிரிக்க மக்கள் அவமானத்தில் சிறுத்துப் போனார்கள். உலகத் தலைவர்கள் அத்தனை பேரும் உள்ளார்ந்த அன்பும் அனுதாபமும் பொங்க மண்டேலாவை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகிற வேளையில் தேசத்தின் முதன்மைப் பிரதிநிதியாக நிற்பவரின் யோக்கியதை சார்ந்த அவமானம் அது.
ஸூமாவின் பெரும் பலம் கட்சி அவர் கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்து இருப்பது. செய்கிற ஊழல் அனைத்திலும் அவர் கட்சி முக்கியஸ்தர்களுக்குப் பங்களித்து எப்போதும் தன் பக்கம் இருக்க வைத்துவிடுவது வழக்கம். அவர்மீதான ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டு தண்டனையே அறிவிக்கப்பட்டாலும், ஸூமா ஆட்சியில் அமர்வதைத் தென்னாப்பிரிக்காவில் யாரும் தடுக்க முடியாது என்று வெளிப்படையாகவே அங்கே பேசுகிறார்கள்.
இன்னொரு விடுதலைப் போராட்டம் நடத்துவது தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. அடுத்த ஆறு மாதங்களில் அங்கே அதிபர் தேர்தல் வர விருக்கிறது. இம்முறை ஸூமாவை நிச்சயமாகப் பதவியில் இருக்க விடக்கூடாது என்றுதான் நினைத்து க்கொண்டிருக்கிறார்கள். உலகத் தரத்தில் ஒரு பெரும் தலைவர் இருந்து, வாழ்ந்து, போராடி, வென்று, ஆண்டுகாட்டிவிட்டு மறைந்திருக்கிறார். அவர் இருந்த இருக்கையில் இருப்பவர்கள் தேசத்துக்குத் தீராத அவமானத்தையும் சங்கடத் தையும் தருவது குறித்த சங்கடம் அவர்களுக்குத் தீவிரமாக எழுந்திருக்கிறது.
மண்டேலாவுக்குச் செலுத்தும் உண்மையான மரியாதை என்பது ஊழலற்ற அடுத்த ஆட்சியை அமைப்பதுதான் என்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. மக்களின் இந்தத் தெளிவு, ஸூமாவுக்கும் புரிந்தால் நல்லது.