

2013 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி (மிஸ் யூனிவர்ஸ்) போட்டியில், வெனிசுலாவைச் சேர்ந்த கேப்ரியெல்லா ஐஸ்லர் பட்டத்தைக் கைப்பற்றினார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் மனாசி மோகே முதல் 10 இடங்களுக்குள் வந்தார். பிரபஞ்ச அழகிக்கான போட்டியில் மொத்தம் 86 நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
வெனிசுலாவில் நடனக் கலைஞராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் வலம்வந்தவர் கேப்ரியெல்லா ஐஸ்லர். இவருக்கு, 2012 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி அமெரிக்காவைச் சேர்ந்த ஒலிவியா கல்போ மகுடம் சூட்டினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற 6 பிரபஞ்ச அழகிப்போட்டிகளில் மூன்று முறை வெனிசுலாவைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்பெயினைச் சேர்ந்த பட்ரிகா ரோட்ரிக், ஈகுவடாரைச் சேர்ந்த கான்ஸ்டன்ஸா பேயஸ், பிலிப்பின்ஸைச் சேர்ந்த ஏரியல்லா அரிடா, பிரேஸிலைச் சேர்ந்த ஜாக்லைன் ஆலிவெய்ரா ஆகியோர் முறையே 2,3,4 மற்றும் 5 ஆம் இடங்களைப் பிடித்தனர்.
நடப்பாண்டுக்கான நடுவர் குழுவில், ஏரோஸ்மித் இசைக்குழுவைச் சேர்ந்த ஸ்டீவன் டெய்லர், மாடல் ஆனி வையாலிட்சைனா, அமெரிக்க நடிகை கார்லோ அல்ட், சமையல் கலைஞர் நோபுயுகி மட்சுஹிசா, ஹேர்-கேர் மற்றும் ஸ்பா நிறுவரன்ர் பரூக் ஷமி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பிகர் ஸ்கேட்டிங் வீராங்கனை தாரா லிபின்ஸ்கி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தியாவில் இருந்து கடைசியாக 2000ஆம் ஆண்டு லாரா தத்தா பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.