

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பான தகவல்களை இனியும் வெளியிடமாட்டோம் என ஆஸ்திரேலியாவின் முன்னணி நாளிதழ் 'தி ஆஸ்திரேலியன்' நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இந்திய கடற்படைக்கு 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 1 கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கப்பல் குறித்த ரகசிய ஆவணங்களை ஆஸ்திரேலியாவின், 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தி நியூ சவுத் வேல்ஸ் மாகாண உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை தனது இணையதளத்தில் இருந்து ஸ்கார்பீன் தொடர்பான ஆவணங்களை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
அதுதவிர பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் நிறுவனத்திடம் தன்வசம் உள்ள ஸ்கார்பீன் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக டிசிஎன்எஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகைக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், "கசிந்த ஸ்கார்பீன் ரகசியங்கள் ஊடகத்தில் வெளியானதால் டிசிஎன்எஸ் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிலிருக்கும் தரவுகள் மிக முக்கியமானவை என்பதால் அவற்றின் மதிப்பு கருதி இனியும் ஸ்கார்பீன் ரகசியங்களை 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை வெளியடாமல் இருக்க நடவடிக்கை தேவை எனக் கூறியிருந்தது".
இந்த வழக்கை விசாரித்த தி நியூ சவுத் வேல்ஸ் மாகாண உச்ச நீதிமன்றம் தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை தனது இணையதளத்தில் இருந்து ஸ்கார்பீன் தொடர்பான இதுவரை வெளியிடப்பட்ட ஆவணங்களை நீக்க வேண்டும் எனவும் தன்வசம் இருக்கும் அத்தனை ஆவணங்களை டிசிஎன்எஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு குறித்து 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகையின் அசோசியேட் எடிட்டர் கேமரூன் ஸ்டூவர்ட் கூறும்போது, "எங்களிடம் ஸ்கார்பீன் தொடர்பாக நிறைய ஆவணங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவற்றை நாங்கள் பிரசுரிக்கப் போவதில்லை" என்றார்.
மலேசியா, சிலி ஆகிய நாடு களின் கடற்படையில் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. ரகசிய ஆவண கசிவால் அந்த நாடுகளும் கவலை அடைந்துள்ளன. ஆஸ் திரேலியா, பிரேசில் உள்ளிட்ட நாடு கள் டிசிஎன்எஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்களை வாங்க திட்ட மிட்டிருந்தன. அந்த நாடுகளின் அரசும் தற்போது தீவிர ஆலோ சனை நடத்தி வருகின்றன.