

ரஷியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வோல்கோகிராட் நகரின் முக்கிய ரயில் நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அப்போது, ரயில் நிலையத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் அருகே வந்த ஒரு பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய பயங்கரவாத தடுப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில், தற்கொலைப்படையைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரஷியாவின் புலனாய்வுக் குழு செய்தித் தொடர்பாளர் விளாதிமர் மார்கின் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியானதும், இதே நகரில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி பேருந்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், வடக்கு காகசஸ் முழுவதும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தக் கோரி அங்கு அடிக்கடி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.