

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் 3 நாட்கள் பயணமாக நேற்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். இந்தப் பயணத்தின்போது போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
ஆசிய நாடுகள் பயணத் திட்டத்தில் கடந்த 30-ம் தேதி பான் கி-மூன் மியான்மர் நாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து நேற்று இரவு அவர் இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். அவர் இன்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து நாளை காலி நகரில் நடைபெறும் நிகழ்ச்சி யில் பங்கேற்கிறார். நாளைமறு தினம் தமிழர் பகுதியான யாழ்ப் பாணம் செல்லும் பான் கி-மூன் அங்குள்ள நிவாரண முகாமுக்கும் செல்கிறார். அப்போது போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
சிங்களர்கள் போராட்டம்
இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை வலியுறுத்தி வருகிறது. ஆனால் உள்ளூர் நீதிபதிகள் மூலம் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு வாதிட்டு வருகிறது. ஐ.நா. பொதுச்செயலரின் பயணத்தின்போது இந்த விவகாரம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் பான் கி-மூன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அமைப்புகள் சார்பில் தலைநகர் கொழும்பு உட்பட நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் கொழும்பில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கைதிகள் விடுதலை?
இறுதிக் கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் என்ற சந் தேகத்தின்பேரில் ஆயிரக்கணக் கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு கால கட் டங்களில் விடுதலை செய்யப்பட் டனர். ஆனால் இன்னும் 250-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா. பொதுச்செயலரின் பயணத்தின்போது இந்த விவகாரத்தை சுட்டிக் காட்டி யாழ்ப்பாணத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழர் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.