

மனித உரிமை மீறல் புகார் விவகாரத்தில் அதை சரி செய்ய எடுத்த நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடம் காமன்வெல்த் மாநாட்டில் எழுப்ப பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்ற பிரபுக்கள் அவையில் செவ்வாய்க்கிழமை வெளியுறவு இணை அமைச்சர் சயீதா வார்சி பேசினார். இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டை பிரிட்டன் புறக்கணித்தால் இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் புகாரை, தீவிர பிரச்சினை மிக்கதாக பிரிட்டன் கருதுகிறது என்கிற செய்தி சென்றடையுமல்லவா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வார்சி, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதன் மூலம், மனித உரிமைகளை கட்டிக்காத்திடும் வகையில் இலங்கை தரப்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது பற்றி வினா எழுப்ப வாய்ப்பாக அமையும் என்று பிரிட்டன் கருதுவதாக சொன்னார்.
2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட போர் படிப்பினை மற்றும் சமரசக் கமிஷன் பரிந்துரையை ஏற்று, தரப்பட்ட உத்தரவாதங்கள் நிறைவேற்றப்பட்டதா என்பது பற்றி இலங்கையிடம் கேள்வி எழுப்ப முடியும். இந்த கமிஷனின் பரிந்துரைகளில் சில அமல்படுத்தப்பட்டன என்றாலும் நிறைவேற்றப்படாமல் உள்ளவை ஏராளம்.
இவை தொடர்பாக பிரிட்டன் நிச்சயம் பிரச்சினை எழுப்பும் என்றார் வார்சி.
மனித உரிமைகளை கட்டிக் காத்திடும் விஷயத்தில் இலங்கை யின் செயல்பாடு திருப்திகரமாக அமையாததால் கொழும்பில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பிரிட்டன் பங்கேற்கக்கூடாது என வெளியுறவு ஆலோசனைக் குழு பரிந்துரைத்திருந்தது. அதனையொட்டியே பிரிட்டனின் நிலைப்பாட்டை வார்சி வெளியிட்டார்.