

இந்தியாவின் 68-வது குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபாவில் காவி, வெள்ளை மற்றும் பச்சை என இந்திய தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஒளியூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் 68-வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அபுதாபியின் பட்டத்து இளவரசரான ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் வந்துள்ள நிலையில் புர்ஜ் கலிபா கட்டிடம் இவ்வாறு ஒளியூட்டப்பட்டுள்ளது.
இது இந்தியாவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான கலாச்சார மற்றும் வணிக பந்தத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து புர்ஜ் காலிபா ட்விட்டர் கணக்கில் இருந்து, ''இந்தியக் குடியரசுக்கு புர்ஜ் காலிபா இனிய வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது'' என்று பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் புர்ஜ் காலிபாவில் எல்ஈடி விளக்கு சாகசங்கள் மூன்று முறை நடத்தப்பட்டுள்ளது, அவை நாளை வரை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே உயரமான கட்டிடமாக புர்ஜ் காலிபாவின் நீளம் 823 மீட்டர்கள். இக்கட்டிடத்துக்கு அபுதாபியின் அரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபருமான காலிஃபா பின் சையத் அல் நஹ்யானின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 அமீரகங்களில் ஒன்றான துபாயில் இக்கட்டிடம் அமைந்துள்ளது.