

இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்றார். 2 முறை அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார்.
இதைத் தொடர்ந்து இலங்கை சுதந்திர கட்சியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக கட்சித் தலைவர் பதவியையும் ராஜபக்ச ராஜினாமா செய்தார். கட்சியின் தலைமைப் பொறுப்பை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஏற்றுக் கொண்டார்.
தற்போது மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும் கட்சியில் இருந்து முழுமையாக ஓரம் கட்டப்பட்டுள்ளனர். எனவே புதிதாக கட்சியைத் தொடங்க ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். இதற்காக மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்ச தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு இலங்கை சுதந்திர கட்சிக்கு இணையான பெயர் ஒன்றை தேர்வு செய்ய ஆலோசித்து வருகிறது. விரைவில் மஹிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட உள்ளது.