Published : 08 Mar 2014 10:46 AM
Last Updated : 08 Mar 2014 10:46 AM

அமெரிக்காவில் சோனியாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக அமெரிக்காவில் சீக்கியர் அமைப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1984-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்நிலையில் இந்தக் கலவரத்தில் தொடர்புடைய காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக கூறி, அமெரிக்காவில் இயங்கிவரும் “நீதிக்கு ஆதரவான சீக்கியர்கள்” என்ற அமைப்பு நியூயார்க், மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் சோனியாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

இந்நிலையில் சோனியா காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக நியூயார்க் சென்றபோது, மருத்துவமனை நிர்வாகம் மூலம் அவருக்கு இவ்வழக்கில் சம்மன் வழங்கப்பட்டது.

இவ்வாறு சம்மன் வழங்கப்பட்டதை கடுமையாக ஆட்சேபித்து, சோனியா தரப்பில் வழக்கறிஞர் ரவிபத்ரா மனு தாக்கல் செய்தார். மருத்துவ சிகிச்சைக்காக இங்கு வந்துள்ள ஒருவருக்கு சம்மன் வழங்கியிருக்க கூடாது. இவ்வழக்கில் அதற்கான அதிகாரமும் நீதிமன்றத்துக்கு இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரவிபத்ரா வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், “30 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் இந்திய குடிமக்களுடன் தொடர்புடையது. இதில் அமெரிக்காவை தொடர்புபடுத்தவேண்டிய அவசியமில்லை. இந்த சம்பவத்தில் காங்கிரஸ் கட்சி அமெரிக்க நீதிமன்றத்தில் வந்து பதில் அளிக்க வேண்டும் என்று சீக்கியர் அமைப்பு கோருவது முறையல்ல. வெளிநாடுகளில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது.

இதனால் பிற நாடுகளுடனான அமெரிக்க உறவு பாதிக்கும். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ராபர்ட் ஸ்வீட் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியின் இந்த மனுவுக்கு பதில் அளிக்க சீக்கியர் அமைப்பு சார்பில் அவகாசம் கோரப்பட்டது.இதையடுத்து வழக்கு விசாரணையை மார்ச் 19-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x