

உலகின் நான்காவது மிகப்பெரிய சூறாவளியாகக் கருதப்படுகிறது 'ஹையான்' புயல்.
அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு, புயலை மூன்று வகைகளாகப் பிரிக்கிறது. ஆங்கிலத்தில் 'ஹரிகேன்' என்று சொல்லப்படுகிற புயல் அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு பசிபிக் பகுதியிலிருந்தும், 'சைக்கோலன்' எனும் புயல் தென் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்தும், 'டைஃபூன்' எனும் புயல் வடமேற்கு பசிபிக் பகுதியிலிருந்தும் மையல் கொள்கின்றன. வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் நாட்டைத் தாக்கியது 'டைஃபூன்' வகையைச் சார்ந்த 'ஹையான்' புயல்தான்.
அமெரிக்காவின் 'டைஃபூன் எச்சரிக்கை இணைவு மையம்' வரையறுத்துள்ள படி, புவிப்பரப்பில் ஒரு விநாடிக்கு 60 மைல் வேகம் கொண்டு சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்திருக்கும் புயல் வகைகளை 'சூப்பர் டைஃபூன்' என்று அழைக்கிறார்கள்.
வெப்ப மண்டலப் புயலான ஹையான், இதுவரை இல்லாத அளவுக்கு நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் இதற்கு முன்பு 1964-ல் 'சாலி' எனும் 'சூப்பர் டைஃபூன்' புயலும், 2011ல் 'வஷி', 2012ல் 'போஃபா' எனும் 'டைஃபூன்' புயல் வகைகளும் சூறையாடி இருக்கின்றன.
பிலிப்பைன்ஸில் மட்டும் அதிக அளவு இத்தகைய புயல் தாக்குவதற்குக் காரணம் அந்தப் பகுதி பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ளது. அவ்வப்போது இத்தகைய புயல் எழும்புவதற்கும், புயலின் வேகம் கூடுவதற்கும் பருவ நிலை மாற்றம்தான் முக்கியக் காரணம் என்று பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.
புயல் உருவாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு பசிபிக் பெருங்கடலின் வெப்பம் எந்த அளவு இருந்தது என்று ஆராய வேண்டும்.
மேற்கு பசிபிக் பகுதியில் கடந்த சில வாரங்களாகவே மேற்பரப்பு நீர் மற்றும் ஆழத்தில் உள்ள நீர் இரண்டிலும் வெப்பம் அதிகமாகவே இருந்துள்ளது. இதனால் கடலில் அதிகளவு வெப்ப ஆற்றல் சேமிக்கப்பட்டது. அந்த சேமிப்பின் எல்லை கை மீறிய போது, காற்று அதை உள்வாங்கிக் கொண்டது. இதுவே ஹையான் புயல் உருவானதற்கும் தீவிரமடைந்ததற்கும் காரணம் என்கிறார்கள் புவியியலாளர்கள்.