ஈரான் அதிபருக்கு, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் திடீர் அழைப்பு

ஈரான் அதிபருக்கு, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் திடீர் அழைப்பு
Updated on
1 min read

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஈரான் அதிபர் ஹசன் ரௌகானிக்கு தொலைபேசி மூலம் திடீர் அழைப்பு விடுத்து புதன்கிழமை பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.

கடந்த 10 ஆண்டுகளில் எந்த பிரிட்டிஷ் பிரதமரும் ஈரான் தலைவர்கள் எவருடனும் தொடர்பு கொண்டு பேசியதில்லை. அதற்கு மாறாக கேமரூன் ஈரான் அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் என பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஈரானின் அணு சக்தி திட்டங்கள் தொடர்பாக நடைபெற உள்ள பேச்சுவார்த்தை, சிரியாவில் நடைபெற்று வரும் சண்டை, லண்டன், தெஹ்ரான் இடையேயான இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

ஜெனீவாவில் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இரு தலைவர்களும் தொலைபேசி மூலமாக தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஈரானின் அணு சக்தி திட்டங்கள் தொடர்பாக அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும், மீண்டும் வியாழக்கிழமை தொடங்க உள்ள அடுத்து சுற்று பேச்சுவார்த்தையை பயன்படுத்திக்கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணு சக்தி திட்டங்கள் மீது சர்வதேச சமுதாயம் கவலை தெரிவிப்பதால் அவற்றுக்கு விளக்கம் தெரிவித்து நம்பிக்கை ஏற்படுத்துவது அவசியம் என்றும் இந்த விவகாரத்தில் ஈரானிடம் வெளிப்படைத்தன்மை தேவை என்றும் கேமரூன் வலியுறுத்தியதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

சிரியா விவகாரம் பற்றி பேச்சு எழுந்த போது வன்முறைக்கு முடிவு கண்டு அரசியல் தீர்வு காண்பது இன்றியமையாதது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in