

அமெரிக்காவில் ஹர்னிஷ் படேல் (43) என்ற இந்திய வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடல் வீட்டுக்கு வெளியே துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் காணப்பட்டது.
தெற்கு கரோலினாவின் லங்காஸ்டர் கவுண்டியில் ஸ்டோர் ஒன்றை நடத்தி வந்தார் ஹர்னிஷ் படேல். இந்நிலையில் அவரது உடல் அவர் வீட்டின் முன்புறத்தில் துப்பாக்கிக் காயங்களுடன் காணப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளி யார், காரணம் என்னவென்பது பற்றி இன்னமும் முழு விவரங்கள் வெளியாகவில்லை. ஹர்னிஷ் படேலுக்கு மனைவியும், தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தையும் உள்ளனர்.
வியாழனன்று அவர் தன் கடையை மூடிவிட்டு சில்வர் மினிவேனில் 6 கிமீ தொலைவில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டுள்ளார். வீட்டினருகேதான அவர் கொலையாளியை எதிர்கொண்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நள்ளிரவுக்கு சில நிமிடங்கள் முன்னதாக படேல் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கரோனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நள்ளிரவு 11.33 மணியளவில் லங்காஸ்டர் கவுண்டி போலீஸுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது, அதில் துப்பாக்கிச் சுடும் சத்தமும், அலறலும் கேட்டதாக ஒருவர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.
நிறவெறி காரணமாக படேல் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என்று காவலதிகாரி தெரிவித்துள்ளார். படேலின் நண்பர்கள், கடை வாடிக்கையாளர்கள் படேல் கொலையையடுத்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர், படேல் வீட்டுக்குச் சென்று இரங்கல்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அவரது கடை வாடிக்கையாளர் நிகோல் ஜோன்ஸ் கூறும்போது, “அவருக்கு இப்படி ஒருவர் செய்ய முடியுமா என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. அவர் அனைவரிடத்திலும் நன்றாகப் பழகக்கூடியவர், பணம் இல்லாவிட்டால் கூட அவர் பொருள் இல்லை என்று கூறியதில்லை.
படேலின் இன்னொரு வாடிக்கையாளர் மற்றும் நண்பர் மரியோ சாட்லர் கூறும்போது, இதற்கு முன்பாக தனக்கு வேலை வழங்கியதாகவும், கடின காலங்களில் தனக்கு உதவியதாகவும் தெரிவித்தார். “என் குழந்தைகள் வளர்ந்ததை பார்த்தவர் அவர், அதனால்தான் அவருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமை மிகுந்த வலிதருகிறது” என்றார்.
படேலின் மிகவும் நெருங்கிய நண்பர் திலிப் குமார் கஜ்ஜார், படேலின் ஸ்டோருக்கு அருகில் ஏபிசி ஸ்டோர் நடத்தி வருபவர், அவர் கூறும்போது, அமெரிக்காவுக்கு வந்து தனது வாழ்க்கையை சிறப்பாக நடத்த முடிவெடுத்து வந்தார், அதை அவர் செய்து காட்டினார் என்றார்.
கன்சாஸ் நகரில் 32 வயது இந்தியப் பொறியாளர் சுட்டுக் கொல்லப்பட்டதன் அதிர்ச்சியும் வலியும் குறைந்து விடாத நிலையில் அப்பாவி இந்திய வணிகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பாகியுள்ளது.
ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரம் முதல் அவர் பதவியேற்றது முதல் முஸ்லிம்கள், அகதிகள், அயல்நாட்டவர்கள் மீது கடும் வெறுப்புணர்வு அமெரிக்காவில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.