

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போது அயல்நாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்றத்துக்கு எதிரான உத்தரவுகளைப் பிறப்பித்தாரோ அதன் விஷ விதை உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் கூட பரவியுள்ளது.
கன்சாஸ் நகரில் இன்று ‘எங்கள் நாட்டிலிருந்து வெளியேறு’ என்று இந்திய இஞ்சினியரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் வெள்ளை அமெரிக்கர். அதே வேளையில் தென் ஆப்பிரிக்காவில் இன்று நைஜீரியா, ஜிம்பாப்வே, சோமாலியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களின் குடியிருப்புகள், கடைகளை கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க தலைநகரான பிரிடோரியாவில் வெள்ளியன்று அதிபர் ஜேகப் ஸூமாவின் கண்டனத்தையும் பொருட்படுத்தது 300 பேர் வெளிநாட்டினருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஊர்வலம் சென்றனர்.
அயல்நாட்டினருக்கு எதிரான இந்த வெறுப்பு மனநிலையை அதிபர் ஸூமா கண்டித்துள்ளார்.
பிரிட்டோரிய சாலைகளிலும் தெருக்களிலும் டயர்கள் எரிக்கப்பட்டு அகதிகள், அயல்நாட்டு குடியேறிகளுக்கு எதிராக கோஷங்களும் போராட்டங்களும் வெடித்தன.
அயல்நாட்டினருக்கு எதிராக அவர்களின் கடைகளும் வீடுகளூம் அடித்து நொறுக்கப்பட்டு, தீவைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. அயல்நாட்டினர் விபச்சார விடுதிகளையும், போதைமருந்துகளையும் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதையே அடித்து உடைத்து எரித்தோம் என்று உள்ளூர் வாசிகளின் துணையுடன் ஆர்பாட்டக் கும்பல் கூறுகிறது.
அதிபர் ஸூமா கூறும்போது, “தென் ஆப்பிரிக்கர்கள் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தகக்து, நம் நாட்டின் பரவலான குற்றப்பிரச்சினைகளுக்கு அயல்நாட்டினரை பலிகடாவாக்குவது நியாயமற்றது, உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டுபிடித்து தண்டிக்கும்” என்றார்.
தென் ஆப்பிரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டமும் வறுமையும் அதிகரித்து வருவதால் அங்கு வெளிநாட்டினர் மீது சமீப ஆண்டுகளில் வன்முறை செலுத்த ப்பட்டு வருகிறது.
பிரிட்டோரியாவுக்கு வெளியே கடந்த வாரம் அட்டரிட்ஜெவில் என்ற இடத்தில் அயல்நாட்டினரின் 20 கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டன. ரோசட்டன்வில், தெற்கு ஜோகன்னஸ்பர்க் ஆகிய நகரங்களில் 12 வீடுகளை அப்பகுதியைச் சேர்ந்த மக்களே தாக்கியுள்ளனர்.
காங்கோவிலிருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு குடியேறி 14 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் 47 வயது அலைன் போம் என்பவர் கூறும்போது, “அயல்நாட்டு குடியேற்றவாசிகளுக்கு எதிரான பேரணியின் போது நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நாங்கள் பயந்துதான் வெளியே வரவில்லை, நிச்சயம் தாக்கப்படுவோம், தென் ஆப்பிரிக்கர்களை நாங்கள் நன்கு அறிவோம்” என்றார்.
2008-ல் அயல்நாட்டினருக்கு எதிரான மோசமான வன்முறையில் 62 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்களை ஆப்பிரிக்கர்களே தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே உள்ள வெறுப்பரசியல், துவேஷம் ட்ரம்ப் வருகைக்குப் பிறகு அதிகரித்துள்ளது, மேலும் சில நாடுகளுக்கும் பரவி வருகிறது.