Published : 08 Feb 2014 10:37 AM
Last Updated : 08 Feb 2014 10:37 AM

ஆராய்ச்சியில் பின்தங்கி இருக்கிறது இந்தியா: அமெரிக்க ஆய்வு முடிவு

அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா பின்தங்கி இருப்பதாக அமெரிக்க அரசின் ஆய்வு தெரிவிக்கிறது.

2011-ம் ஆண்டு உலக அளவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு 1,435 பில்லியன் டாலர் ( சுமார் ரூ.89.54 லட்சம் கோடி) செலவிடப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. 2001-ம் ஆண்டு உலகம் முழுவதும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குச் செலவிடப்பட்ட தொகை 753 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 46.9 லட்சம் கோடி)மட்டுமே.

2011-ம் ஆண்டு அமெரிக்கா 424 பில்லியன் டாலர் தொகையை ஆராய்ச்சிக்கு செலவிட்டிருக்கிறது. ஆராய்ச்சிக்கு உலகம் முழுவதும் செலவிடப்படும் தொகையில் அமெரிக்காவின் பங்கு 30 சதவீதமாக இருக்கிறது. ஆனால் 2001-ம் ஆண்டு உலகின் ஒட்டு மொத்த ஆராய்ச்சியில் அமெரிக்காவின் பங்கு 37 சதவீதமாக இருந்தது.

அமெரிக்காவுக்கு அடுத்து சீனா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2011-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக 208 பில்லியன் டாலர் (சுமார் 12.97 லட்சம் கோடி) தொகையை சீனா செலவிட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் சீனா ஆராய்ச்சிக்கு செலவிடும் தொகை ஆண்டுக்கு 20.7 சதவீதமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

2007-ம் ஆண்டு தகவலின் படி இந்தியா ஆராய்ச்சிக்கு 24 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.49லட்சம் கோடி) தொகையை மட்டுமே செலவிட்டிருக்கிறது. உலகின் ஒட்டு மொத்த ஆராய்ச்சியில் கிழக்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா பிராந்திய நாடுகளின் (சீனா, இந்தியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, தைவான்) பங்கு 34 சதவீதமாக இருக்கிறது. 2001-ம்ஆண்டு இந்த நாடுகளின் பங்களிப்பு 25 சதவீதமாக இருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி அதிகபட்சமாக 93 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 5.80 லட்சம் கோடி) ஆராய்ச்சிக்காக செலவிடுகிறது. இதற்கு அடுத்து பிரான்ஸ் 52 பில்லியன் டாலர் (சுமார் ரூ.3.24 லட்சம் கோடி) செலவிடுகிறது. ஆராய்ச்சிக்காக செலவிடப்படும் தொகையில் 72 சதவீதம் ஏழு நாடுகளில் இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x